தேவ்தத் படிக்கல் அரைசதம்..அரியானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கர்நாடகா
விஜய் ஹசாரே கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் அரியானா - கர்நாடகா அணிகள் இன்று மோதின.;
வதோதரா,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 32-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதன் பிளே ஆப் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் அரியானா, கர்நாடகா, விதர்பா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், இந்த தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் வதோதராவில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அரியானா - கர்நாடகா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 237 ரன்கள் எடுத்தது. அரியானா தரப்பில் அதிகபட்சமாக அன்கித் குமார் 48 ரன், ஹிமான்ஷூ ராணா 44 ரன் எடுத்தனர்.
கர்நாடகா தரப்பில் அபிலாஷ் ஷெட்டி 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 238 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த கர்நாடகா அணி 47.2 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 238 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கர்நாடகா தரப்பில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 86 ரன், ரவிசந்திரன் 76 ரன் எடுத்தனர்.
அரியானா தரப்பில் நிஷாந்த் சிந்து 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் கர்நாடகா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து நாளை நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா - மகாராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.