இங்கிலாந்து டி20 தொடர்: துபே, கெய்க்வாட் தேர்ந்தெடுக்கப்படாதது ஏன்? இந்திய முன்னாள் வீரர் கேள்வி

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபே மற்றும் கெய்க்வாட் ஆகியோர் இடம்பெறவில்லை.;

Update:2025-01-14 20:29 IST

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நீண்ட நாட்கள் கழித்து இடம்பெற்றுள்ளார். மேலும் துணை கேப்டன் பதவி ஹர்திக் பாண்ட்யாவிடமிருந்து பறிக்கப்பட்டு அக்சர் படேலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அணியில் ஷிவம் துபே மற்றும் கெய்க்வாட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படாதது சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் ஐ.பி.எல். தொடரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் இந்திய டி20 அணிக்காகவும் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தியுள்ளார்.

அதை விட 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக ஷிவம் துபே தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த வாய்ப்பில் ஆரம்பகட்ட போட்டிகளில் தடுமாறிய அவர் இறுதிப்போட்டியில் முக்கியமான ரன்களை அதிரடியாக எடுத்து வெற்றியில் பங்காற்றினார். அதன் பின் காயத்தை சந்தித்த அவர் மீண்டும் குணமடைந்து சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இங்கிலாந்து தொடரில் தேர்ந்தெடுக்கப்படாதது ஏன்? என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஷிவம் துபேவுக்கு என்னவாயிற்று? ருதுராஜ் பற்றியும் நான் பேச விரும்புகிறேன். ரஜத் படிதாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஷிவம் துபே டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். அத்தொடரில் ஆரம்பத்தில் சுமாராக விளையாடிய அவர் இறுதிப்போட்டியில் நன்றாக விளையாடினார். அவர் டி20 உலகக்கோப்பை சாம்பியனாக சாதனையும் படைத்தார். அதன் பின் கொஞ்சம் காயத்தை சந்தித்த அவர் தற்போது அணியிலேயே இல்லை. அதைப் பற்றி யாரும் பேசவும் இல்லை. ரியான் பராக் காயத்தை சந்தித்ததால் யாரும் பேசவில்லை.

ஆனால் துபே தற்போது குணமடைந்தும் திடீரென அணியில் இருந்து காணாமல் போயுள்ளார். உலகக்கோப்பை அணியில் விளையாடுவதற்கு போதுமானவராக அவர் இருந்தால் இன்னும் சில வருடங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். இல்லையென்றால் ஏன் உலகக் கோப்பையில் தேர்ந்தெடுத்தீர்கள்?. முன்பெல்லாம் காயத்தை சந்தித்து வெளியேறுபவர்கள் மீண்டு வரும்போது அவர்களுடைய இடத்தில் அசத்துபவர்கள் அவர்களுக்காக வழி விட வேண்டும் என்ற கூற்று இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் என்ன செய்தாலும் இடம் கிடைப்பது கடினமாக இருக்கிறது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்