பார்டர் - கவாஸ்கர் கோப்பை: விராட் கோலிக்கு 10க்கு 7.5 மதிப்பெண்கள் கொடுக்கலாம் - கில்கிறிஸ்ட்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விராட் கோலி பொழுதுபோக்கை உண்டாக்கியதாக ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.;
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் முடிவடைந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் தோல்வியை தழுவியது. இதனால் 10 வருடங்களுக்கு பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்தது. அத்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தது.
இந்த தொடரின் முதல் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி, அதன் பின் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலிய பவுலர்களின் அவுட் சைடு ஆப் பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்த அவர் தோல்விக்கு ஒரு காரணமாய் அமைந்தார்.
இருப்பினும் அந்த தொடரில் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டாலும் களத்தில் விராட் கோலியின் ஆக்ரோஷம் குறையவில்லை. சாம் கான்ஸ்டஸ் தோளில் இடித்து தள்ளிய அவர் சர்ச்சையில் சிக்கி அபராதத்தை பெற்றுக்கொண்டார். மேலும் தமக்கு எதிராக கூச்சலிட்ட ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு கடைசி போட்டியில் விராட் கோலி பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் அந்த தொடரில் விராட் கோலி சுமாராக விளையாடினாலும் களத்தில் பொழுதுபோக்கை உண்டாக்கியதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலியை ஒரு ஆல் ரவுண்டர் பேக்கேஜ் என்று நம்மால் சொல்ல முடியும். அவர் விளையாட்டுக்கு நிறைய ரசிகர்களை கொண்டு வருகிறார். எனவே அவருக்கு 10க்கு 7.5 மதிப்பெண்களை நான் தருவேன்" என்று கூறினார்.