தொடர் தோல்வி எதிரொலி: இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. விதித்துள்ள அதிரடி கட்டுப்பாடுகள்.. வெளியான தகவல்

இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் பிசிசிஐ புதிய விதிகளை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2025-01-14 16:30 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரிலும் தோல்வியை தழுவியது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல் முறையாக வெளியேறியதுடன் 10 வருடங்கள் கழித்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையையும் இழந்துள்ளது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக பி.சி.சி.ஐ., இந்திய அணியின் வீரர்கள் மீது பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இந்திய வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்று பயிற்சியாளர் கம்பீர் கட்டளையிட்டு இருந்தார்.

அதற்கடுத்து தற்போது இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யும் புதிய விதிகளை அமல்படுத்தும் அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியான தகவலின் படி, இனி இந்திய வீரர்கள் யாரும் முறையான அனுமதியின்றி பெரிய தொடர்களை தவிர்த்து மற்ற எவ்வித தொடர்களுக்கும் தங்களது மனைவியையோ, குழந்தைகளையோ, உறவினர்களையோ அழைத்துச் செல்லக்கூடாது என்ற புதிய விதிமுறையை வெளியிட்டுள்ளதாகவும், குறைந்தபட்சம் 14 நாட்களில் இருந்து, அதிகபட்சம் 45 நாட்கள் வரை கொண்ட எந்த தொடர்களுக்கும் பிசிசிஐ-யின் முறையான அனுமதி பெற்றே இனி குடும்பத்தாரை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பயண விதிமுறைகளுக்கு உட்பட்டே பயணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியின் வீரர்கள் விளையாடும் எவ்வித தொடர்களுக்கும் அவர்களுக்கு செயல்பாடுகளின் அடிப்படையில் சம்பள விகிதம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்