ஐ.பி.எல்.: ஐதராபாத் அணி அவரை வாங்கியது புத்திசாலித்தனமான முடிவு - இந்திய முன்னாள் வீரர்

சன்ரைசர்ஸ் அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை ஏலத்தில் வாங்கியுள்ளது.;

Update:2025-01-14 15:59 IST

image courtesy: AFP

ஐதராபாத்,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.

இதில் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியானது இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை ரூ.10 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. கடந்த 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு பின்னர் காயம் காரணமாக இதுவரை விளையாடாமல் இருந்து வரும் முகமது ஷமி இந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐதராபாத் அணி முகமது ஷமியை வாங்கியது புத்திசாலித்தனமான முடிவு என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "முகமது ஷமியை 10 கோடி ரூபாய்க்கு ஐதராபாத் அணி வாங்கியது என்னை பொருத்தவரை ஒரு புத்திசாலித்தனமான முடிவு. ஏனெனில் முகமது ஷமியால் இன்றளவும் வெள்ளை பந்தில் மிகச்சிறப்பாக செயல்பட முடியும். அதோடு போட்டியின் பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட்டை வீழ்த்தும் திறமை கொண்ட அவரை ஐதராபாத் அணி வாங்கியுள்ளது நிச்சயம் அந்த அணிக்கு நல்ல முடிவை கொடுக்கும். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்ட முகமது ஷமி நிச்சயம் விக்கெட் வேட்கையுடன் செயல்பட்டு சன் ரைசர்ஸ் அணிக்காக மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்