மகளிர் ஆஷஸ் ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.;

Update:2025-01-14 15:42 IST

image courtesy: twitter/@ICC

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஆஷஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து பந்துவீச்சில் தடுமாறியது. அந்த அணியில் முன்னணி வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி (60 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை. 44.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 4 விக்கெட்டுகளும், ஆலிஸ் கேப்ஸி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மிடில் ஆர்டரில் நாட் ஸ்கைவர்-பிரண்ட் மற்றும் ஆமி ஜோன்ஸ் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினர். இருப்பினும் அவர்கள் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

48.1 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆமி ஜோன்ஸ் 47 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகளும், கிம் கார்த் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அலனா கிங் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்