திருப்பதி லட்டு விவகாரம்: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்

திருப்பதி தேவஸ்தானம் விவகாரங்களில் அரசு ஓர் அளவுக்கு மேல் தலையிட இயலாது என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-22 10:42 GMT

அமராவதி,

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானமும் லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்து இருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆந்திர முன்னாள் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது;

ஆந்திராவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான சூழல்கள் குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதம், ஒருமைப்பாடு மற்றும் நற்பெயரை சீர்குலைக்க முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையை கவனமாகக் கையாளவில்லை என்றால், பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்;

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆந்திர அரசு தோல்வியடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் மாநிலத்திற்கு தேவையான நிதிகளை சரியாக ஒதுக்கவில்லை. ஆந்திர மக்கள் சந்திரபாபு நாயுடுவின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் திருப்பதி தேவஸ்தானம் குறித்த பொய்களைப் பரப்புகிறார்;

திருப்பதி கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இது அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் பொய்யாகும். மேலும் இந்த பொய்ப் பிரசாரம் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதற்கும் சாத்தியம் உள்ளது.

இது முற்றிலும் பொய்யானது என்பதை அறிந்தும், மக்களின் மனதில் ஏற்படுத்தும் ஆழ்ந்த வலியைப் பொருட்படுத்தாமலும் சந்திரபாபு நாயுடு கருத்தைத் தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு மாபெரும் பொய்யர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு தன்னாட்சி அமைப்பு. அதன் விவகாரங்களில் அரசு ஓர் அளவுக்கு மேல் தலையிட இயலாது.

திருப்பதி லட்டு விவகாரத்தில் கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை சந்திரபாபு நாயுடு புண்படுத்திவிட்டார். புண்பட்டுள்ள பக்தர்களின் மனதை நீங்கள்தான் மீட்டெடுக்க வேண்டும்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்