அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரவில்லை: கெஜ்ரிவால் பேச்சு

முதல்-மந்திரி பதவி மீது பேராசையில்லை என டெல்லி முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Update: 2024-09-22 09:30 GMT

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட விவகாரத்தில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது. இதில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை 12-ந்தேதி ஜாமீன் வழங்கியது. சி.பி.ஐ. அமைப்பு பதிவு செய்த வழக்கில், கெஜ்ரிவாலுக்கு கடந்த 13-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலை சுப்ரீம் கோர்ட்டு ஜாமீனில் விடுவித்தது. திகார் சிறையில் இருந்து வெளிவந்ததும் கெஜ்ரிவால் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி அறிவிக்கப்பட்டார். அவர் முறைப்படி நேற்று பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று நடந்த கூட்டத்தில் பொதுமக்கள் முன் டெல்லி முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் உரையாற்றினார்.

அவர் பேசும்போது, முதல்-மந்திரி பதவியை நான் ராஜினாமா செய்தேன். ஏனெனில், ஊழல் செய்வதற்காக அரசியலுக்கு நான் வரவில்லை. முதல்-மந்திரியின் பதவி மீது எனக்கு பேராசையில்லை. பணம் சம்பாதிப்பதற்காக நான் வரவில்லை. வருமான வரி துறையில் நான் பணியாற்றியிருக்கிறேன்.

பணம் சம்பாதிக்க விரும்பியிருந்தால், கோடிக்கணக்கில் நான் சம்பாதித்திருக்க முடியும். நாட்டுக்காக, பாரத மாதாவுக்காக, நாட்டின் அரசியலை மாற்றுவதற்காக, நான் அரசியலுக்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்