மராட்டியத்தில் 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு
மராட்டிய மாநிலம் பிவாண்டி பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் உள்ள ஏரியில் நேற்று மாலை 3 சிறுவர்கள் குளிக்க சென்றனர். குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மூவரும் நீரில் மூழ்கினர். அதில் 2 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் நீரில் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இவர்கள் மூழ்கியதை கண்ட உள்ளூர்வாசிகள் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் காணாமல்போன மூன்றாவது சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்கள் குலாப் அன்சாரி மற்றும் சாஹில் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.