மணிப்பூரில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.
இம்பால்,
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் 1½ ஆண்டுகளுக்கும் மேலாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள டீஜாங் என்ற கிராமத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ராக்கெட் குண்டுகள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.
அதே மாவட்டத்தில் உள்ள லெசியாங் என்ற கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய மற்றொரு தேடுதல் வேட்டையில் துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதே போல இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மாரிங் சந்தங்செங்பா பகுதியிலும் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.