வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி

வாஜ்பாய் தனது வாழ்நாள் முழுவதும் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2024-12-25 06:34 GMT

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் டெல்லியில் உள்ள சதைவ் அடல் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மக்களவைத்தலைவர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரி ஜே.பி.நட்டா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கு நடந்த இசையஞ்சலி நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பல்வேறு முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போது அனைவராலும் போற்றப்படும், தங்க நாற்கர சாலை திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. குமரி முதல் காஷ்மீர் வரை உருவான சாலை பெரும் பயனுள்ளதாக அமைந்தது.

பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

நாட்டின் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் சார்பாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தனது வாழ்நாள் முழுவதும் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டு ஆகும் 2047-ன் அம்ரித் கால் நோக்கத்திற்கு வாஜ்பாயின் அர்ப்பணிப்பு மற்றும் அவரின் தூய்மையான பணி உத்வேகமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்