மெய்சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்.. போக்குவரத்துக்கு தயார் நிலையில் செனாப் மேம்பாலம்

ரூ.1,486 கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள செனாப் பாலம் ஈபிள் டவரைவிட உயரம்.

Update: 2024-12-25 12:28 GMT

ஜம்மு காஷ்மீருக்கு நாட்டின் பிற பகுதிகளுடன் முழுமையான ரெயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் பாதை திட்டம் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஒருசில இடங்களில் மட்டும் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடிக்கப்பட வேண்டியுள்ளன. அந்தப் பணிகளும் விரைவில் நிறைவடைந்து ரெயில் போக்குவரத்தை ஜனவரி 26-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இமயமலையில் சவால் நிறைந்த பகுதியில் நடைபெற்று வரும் இந்த ரெயில் பாதையில் 38 இடங்களில் 119 கி.மீ. நீளத்துக்கு மலைகளை குடைந்து சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், ஒரு சுரங்கப்பாதை மட்டும் 12.75 கி.மீ. நீளம் கொண்டது. பள்ளத்தாக்குகள் வரும் பகுதியில் 37 இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், 26 பாலங்கள் பெரியது.

 

ஒவ்வொரு இடங்களுக்கு இடையே பாதைப் பணிகள் முடிய.. முடிய.. 2005-ம் ஆண்டு முதல் ரெயில்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில், ரியாசி-சங்கல்தான் இடையே இமயமலையின் இரு பகுதிகளுக்கு இடையே செனாப் ஆற்றுக்கு மேலே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட வளைவு பாலத்தை உள்ளடக்கிய வழித்தடத்தில் விரைவில் போக்குவரத்து தொடங்க உள்ளது.

 

ரூ.1,486 கோடி மதிப்பில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் என்ற சாதனையை படைத்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்திலும், செனாப் ஆற்று மட்டத்தில் இருந்து 359 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. அதாவது, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவரை விட 35 மீட்டர் கூடுதல் உயரம்.

17 ராட்சத தூண்கள் மீது 1,315 மீட்டர் நீளம், 15.2 மீட்டர் அகலத்தில் டெக்லா என்ற நவீன தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது இந்த பாலம். இந்த பாலத்தில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் செல்ல முடியும். மைனல் 10 டிகிரி செல்சியஸ் குளிர் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும். 8 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கத்தையும் தாங்க வல்லது. 40 கிலோ எடை கொண்ட டி.என்.டி. குண்டு வெடிப்பையும் தாங்கி நிற்கும். மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றையும் கடந்து போக செய்து கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும்.

செனாப் பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் அடுத்தடுத்து வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. சமீபத்தில் கட்ரா-பனிஹால் ரெயில் வழித்தடத்தில் பாதுகாப்பு கமிஷனர் ரெயிலை ஓட்டி ஆய்வு செய்து செனாப் மேம்பாலம் போக்குவரத்துக்கு தயாராக இருப்பதை உறுதி செய்துள்ளார். ஜனவரி முதல் வாரத்தில் கட்ரா-பனிஹால் பாதையை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்தபின் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் நடைபெறும்.

 

இந்த ரெயில் வழித்தடம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்ததும், ஜம்மு முதல் பாரமுல்லா வரை 435 கிமீ தூரத்திற்கு ரெயில் போக்குவரத்து இருக்கும். சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் மற்றும் செனாப் வளைவு பாலம் வழியாக ரெயிலில் பயணம் செய்வது, பயணிகளுக்கு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை வழங்கும். 

Tags:    

மேலும் செய்திகள்