மணிப்பூரில் எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்களை சேதப்படுத்தியதாக 7 பேர் கைது
மணிப்பூரில் மந்திரி, எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இம்பால்,
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நிலவி வந்த மோதல் கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரமாக வெடித்தது. 1½ ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அங்கு இன்னும் வன்முறை ஓய்ந்தபாடில்லை. குகி மற்றும் மெய்தி இனத்தை சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 11-ந் தேதி 2 ஆண்கள் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர். மேலும் 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களை பத்திரமாக மீட்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 15-ம் தேதி 6 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். இது மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து மாநில அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இம்பால் உள்பட பல மாவட்டங்களில் உள்ள 3 மந்திரிகள் மற்றும் 6 எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை நோக்கி பேரணியாக சென்ற மக்கள் அவர்களது வீடுகளை சூறையாடினர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடித்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்குகள் தொடர்பாக 7 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மந்திரிகளின் வீடுகளுக்கு தீ வைத்ததாக 25 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.