காஷ்மீரில் கல்வீசி தாக்கியவர்கள், பயங்கரவாதிகளை விடுதலை செய்யமாட்டோம்- அமித் ஷா உறுதி

கல்வீசி தாக்கியவர்கள் மற்றும் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி விரும்புவதாக அமித் ஷா குற்றம்சாட்டினார்.

Update: 2024-09-22 10:55 GMT

நவ்ஷேரா:

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா தொகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா கலந்துகொண்டு, பா.ஜ.க. வேட்பாளர் ரவீந்தர் ரெய்னாவை ஆதரித்து பேசினார். அப்போது காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி மற்றும் அவர்களின் கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.

கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:-

அவர்கள் (தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி) ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைத்தால் கல்வீசி தாக்கியவர்கள் மற்றும் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய விரும்புகிறார்கள். தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்கள். ஜம்மு மலைப்பகுதியில் பயங்கரவாதம் புத்துயிர் பெறுவதைப் பற்றி பரூக் அப்துல்லா பேசுகிறார். ஆனால், இது மோடி அரசாங்கம், பயங்கரவாதத்தை அழித்து ஆழமாக புதைப்போம் என்பதை அவருக்கு தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், பயங்கரவாதிகளோ, கல்வீசி தாக்கியவர்களோ விடுதலை செய்யப்படமாட்டார்கள்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரசும் முனைப்பு காட்டுகின்றன. ஆனால், பயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதை பரூக் அப்துல்லாவுக்கும் ராகுல் காந்திக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். நான் எனது சிங்கங்களுடன் (ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள்) பேசுவேன், பாகிஸ்தானுடன் அல்ல.

இனி ஜம்மு காஷ்மீரில் பதுங்கு குழிகள் போன்ற கட்டமைப்புகள் தேவைப்படாது. ஏனென்றால், எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு நடத்த யாருக்கும் அதிகாரம் கிடையாது. எல்லைக்கு அப்பால் இருந்து அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினால், நாம் குண்டு வீசி பதிலடி கொடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்