மைசூருவில் தசரா யானைகள் இடையே மோதல்: வைரல் வீடியோ

தசரா யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

Update: 2024-09-22 06:20 GMT

மைசூரு,

மைசூரு தசரா விழா வருகிற 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. 12-ந்தேதி தசரா ஊர்வலம் நடக்கிறது. இதில் பங்கேற்க 14 யானைகள் மைசூருக்கு வந்துள்ளன. இந்த யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு யானைகளுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்றது. அந்த சமயத்தில் தனஞ்செயா யானை, திடீரென்று தனது அருகில் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த கஞ்சன் யானையை தாக்கத் தொடங்கியது. இதில் நிலைகுலைந்த கஞ்சன் யானை திடீரென்று மிரண்டு சங்கிலியை அறுத்துக்கொண்டு பிளிறியபடி அரண்மனை வளாகத்தில் இருந்து ஓடியது. அதனை துரத்திக் கொண்டு தனஞ்செயா யானை ஓடியது.

இதை பார்த்த அரண்மனை முன்பு கூடியிருந்த மக்கள் அய்யோ... அம்மா.. என அலறியடித்தப்படி ஓட்டம் பிடித்தனர். நடுரோட்டிற்கு சென்ற கஞ்சன் யானை மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்தை பார்த்ததும் அமைதியாக நின்றது. தனஞ்செயா யானை மீது பாகன் அமர்ந்து யானையை ஆசுவாசப்படுத்தினார்.

பின்னர் தனஞ்செயா யானை உதவியுடனே, கஞ்சன் யானையை அந்த பாகன் ஆசுவாசப்படுத்தினார். சிறிது நேரத்திற்கு பிறகு கஞ்சன் யானையை அரண்மனை வளாகத்திற்குள் பாகன்கள் அழைத்துச் சென்றனர். யானைகள் மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தால் மைசூரு அரண்மனை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்