'கிழக்கு இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது' - பிரதமர் மோடி
கிழக்கு இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற 'ஒடிசா பர்பா 2024' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
"ஒடிசா எப்போதும் சாதுக்கள் மற்றும் அறிஞர்களின் நிலமாக இருந்து வந்துள்ளது. இந்தியாவின் கலாசார செழுமைக்கு ஒடிசா மிக முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது. ஒரு காலத்தில் ஒடிசா உள்ளிட்ட கிழக்கு இந்திய பகுதிகள் பின்தங்கிய பகுதிகளாக கருதப்பட்டன. ஆனால், கிழக்கு இந்திய மாநிலங்களை வளர்ச்சிக்கான இயந்திரமாக நாங்கள் பார்க்கிறோம்.
எனவே, தற்போது கிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு இந்திய மாநிலங்களில் அனைத்து துறைகளிலும் தற்போது வேகமான வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசிடம் இருந்து ஒடிசாவுக்கு கிடைத்த நிதியை விட தற்போது 3 மடங்கு அதிக நிதி கிடைக்கிறது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் ஒடிசாவுக்கு 30 சதவீதம் அதிக பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.