தண்டவாளத்தில் கிடந்த கேஸ் சிலிண்டர்... ரெயிலை கவிழ்க்க சதி? - போலீசார் விசாரணை

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் ரெயில்களை கவிழ்க்க 18 முயற்சிகள் நடந்துள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2024-09-22 08:31 GMT

பெரம்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி இன்று காலையில் சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் ஒன்று கிடந்தது. இதைக் கவனித்த டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே பாதுகாப்புப் பணியாளர்கள் சிலிண்டரை தண்டவாளத்தில் இருந்து அகற்றினர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல. முன்னதாக கடந்த 9-ம்தேதி பிரயாக்ராஜில் இருந்து பிவானிக்கு சென்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் கான்பூர் அருகே தண்டவாளத்தில் கிடந்த கேஸ் சிலிண்டரில் மோதியது. இதைத் தொடர்ந்து பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதால், டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தண்டவாளம் அருகே கேஸ் சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் மற்றும் தீப்பெட்டி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் ரெயில்களை கவிழ்க்க 18 முயற்சிகள் நடந்துள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை நடந்த 24 சம்பவங்களில் கேஸ் சிலிண்டர்கள், சைக்கிள்கள், இரும்பு கம்பிகள் போன்ற பொருட்கள் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்