திருமணத்திற்கு சம்மதிக்காததால் பெற்ற மகளை போலீசார் கண் முன்னே சுட்டுக்கொன்ற தந்தை
பெற்ற மகளை தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள கோலா கா மந்திர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குர்ஜார். இவரது மகள் தணு குர்ஜார்(வயது 20). தனது மகள் தணுவுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மகேஷ் செய்து வந்தார். இதன்படி தணுவின் திருமணம் வரும் 18-ந்தேதி நடைபெற இருந்தது.
இதற்கிடையில், தணு தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றௌ வெளியிட்டார். அதில், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், தனது குடும்பத்தினர் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிக்ரம் விக்கி என்ற நபரை 6 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், அவருடன் சேர்ந்த வாழ விரும்புவதாகவும் அந்த வீடியோவில் தணு கூறியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறை கண்காணிப்பாளர் தர்மவீர் சிங் தலைமையில் போலீசார் தணுவின் வீட்டிற்கு சென்றனர். அப்போது கிராம பஞ்சாயத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், அஙுக் சென்ற போலீசாரிடம் தன்னை அரசு காப்பகத்திற்கு கொண்டு செல்லுமாறும், தனக்கு வீட்டில் இருக்க விருப்பம் இல்லை என்றும் தணு கூறினார். ஆனால் தணுவின் தந்தை மகேஷ், தொடர்ந்த தனது மகளை திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்குமாறு வற்புறுத்தி வந்தார்.
இவ்வாறு இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, திடீரென கோபத்தின் உச்சிக்கு சென்ற மகேஷ், போலீசாரின் கண் முன்னே தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து தனது மகளை சுட்டார். இதில் தணுவின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. மேலும் மகேஷின் உறவினரான ராகுல் என்பவரும் தணுவை துப்பாக்கியால் சுட்டார்.
இதில் நெற்றி, கழுத்து உள்ளிட்ட இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே தணு பரிதாபமாக உயிரிழந்தார். மகளை சுட்டுக்கொன்ற மகேஷை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அதே சமயம், ராகுல் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருமணத்திற்கு சம்மதிக்காததால் பெற்ற மகளை போலீசார் கண் முன்னே தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.