கர்நாடகாவில் மதுபான விலை உயர்வுக்கு சித்தராமையா திடீர் தடை

கர்நாடகத்தில் நாளை முதல் உயர்த்தப்பட இருந்த மதுபான விலை உயர்வுக்கு தடை விதித்து முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். அடுத்த மாதத்தில் இருந்துஅமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-30 12:41 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சட்டசபை தேர்தலின் போது கொடுத்த 5 உத்தரவாத திட்டங்களையும் காங்கிரஸ் அரசு அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த 5 உத்தரவாத திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.58 ஆயிரம் கோடி வரை அரசு செலவு செய்கிறது. இதையடுத்து, காங்கிரஸ் அரசு அமைந்ததும் மதுபான விலை உயர்த்தப்பட்டது.

அதன்பிறகு, குறைந்த விலையிலான மதுபானங்களின் விலையை மட்டும் அரசு உயர்த்தி இருந்தது. அதே நேரத்தில் மதுபானங்களின் விலையை மீண்டும் உயர்த்த அரசு முன்வந்தது. இதையடுத்து, அண்டை மாநிலங்களில் மதுபானங்களின் விலை எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஏழை மக்கள் குடிக்கும் மதுபானங்களின் விலைமற்ற மாநிலங்களை விட குறைவாக இருப்பது தெரிந்தது.

இதுபோல், மேலும் சில மதுபானங்களின் விலையையும் குறைவாக இருப்பதாக அரசுக்கு, கலால்துறை சார்பில் அறிக்கை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட சிலமதுபானங்களின் விலையை மட்டும் ஜூலை 1-ந் தேதியில் இருந்து உயர்த்தப்படும் என்று கர்நாடக அரசு கடந்த மாதம் (ஜூன்) அறிவித்திருந்தது. அதற்கு முன்பாக பெட்ரோல், டீசல் மற்றும் பால் விலையை கர்நாடக அரசு அதிகரித்து உத்தரவிட்டது. இதற்கு பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக நாளை (திங்கட்கிழமை) உயர்த்தப் படஇருந்த மதுபானங்களின் விலை உயர்வுக்கு திடீரென்று தடை விதித்து முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஒரு மாதம் பொருத்திருந்து பார்க்க அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து விலை உயர்வை அமல்படுத்தினால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், இன்று முதல் உயர்த்தப்பட இருந்த மதுபானங்களின் விலையை ஒரு மாதம் தாமதமாக, ஆகஸ்டு மாதம் 1-ந் தேதியில் இருந்து அமல்படுத்த முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்