நீட் வினாத்தாள் கசிவு: "யாரும் தப்பிக்க முடியாது" - மக்களவையில் பிரதமர் மோடி உறுதி

நீட் வினாத்தாள் கசிவு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2024-07-02 13:15 GMT

புதுடெல்லி,

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாததிற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமர் மோடி பேச்சை தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

எதிர்க்கட்சி எம்.பிக்களின் அமளிக்கு இடையே பேசிய பிரதமர் மோடி, "3-வது முறையாக தேர்தெடுக்கப்பட்டுள்ள நாங்கள், 3 மடங்கு வேகத்துடன் செயல்படுவோம். மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக கேரளாவில் பா.ஜனதா எம்.பி. வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் போட்டியிட்ட பல இடங்களில் 2-வது இடங்களை பெற்றுள்ளோம். அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றி பெறும்.

எதிர்க்கட்சி வரிசையில் அமர தான் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் போது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழந்தனர். இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரசால் 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 240 இடங்களை கூட தொட முடியவில்லை. காங்கிரஸ் 100க்கு 99 இடங்களை வாங்கவில்லை. 543க்கு 99 இடங்களை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தோல்வியில் சாதனை படைத்துள்ளது" என்று அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு குறித்து பேசிய பிரதமர் மோடி, "நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதுடன், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் போர் கால அடிப்படையில் தனது பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள். யாரும் தப்பிக்க முடியாது. இது தொடர்பாக ஏற்கனவே வலுவான சட்டம் இயற்றியுள்ளோம்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்