'ராகுல் காந்தி இந்துத்துவத்தை அவமதிக்கவில்லை' - உத்தவ் தாக்கரே

ராகுல் காந்தி இந்துத்துவத்தை அவமதிக்கவில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-02 13:23 GMT

புதுடெல்லி,

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய நிலையில், இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி தனது உரையை தொடங்கினார்.

தொடர்ந்து பா.ஜ.க.வினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்று கூறிய ராகுல் காந்தி, தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் 24 மணி நேரமும் "வன்முறையிலும் வெறுப்பிலும்" ஈடுபடுகிறார்கள் என்றும், பா.ஜ.க.வினர் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதிகள் இல்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டார். இருப்பினும் பா.ஜ.க.வைப் பற்றியே பேசியதாக ராகுல் காந்தி தெரிவித்தார். அவரது பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி இந்துத்துவத்தை அவமதிக்கவில்லை என சிவசேனா(உத்தவ் பாலாசாகேப் தாக்கரே அணி) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்டேன். ராகுல் காந்தி உள்பட நாங்கள் யாரும் இந்துத்துவத்தை அவமதிக்க மாட்டோம், இந்துத்துவத்தை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். பா.ஜ.க. என்பது இந்துத்துவம் இல்லை என ராகுல் காந்தி கூறினார். நான் பா.ஜ.க.வை கைவிட்டுவிட்டேன், இந்துத்துவத்தை அல்ல என்பதை மிகத் தெளிவாகக் கூறியுள்ளேன்.

ராகுல் காந்தி மக்களவையில் சிவபெருமானின் படத்தை காட்ட முயன்றார், ஆனால் அதுவும் தடை செய்யப்பட்டது. இதுதான் இந்துத்துவமா? ராகுல் காந்தி இந்துத்துவத்தை அவமதித்ததாக நான் நினைக்கவில்லை. நமது இந்துத்துவம் புனிதமானது."

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்