சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரம்.. மராட்டியம்-58.22, ஜார்கண்ட்-67.59 சதவீத வாக்குப்பதிவு
மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
மும்பை,
மராட்டியம், ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக இன்று 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
5 மணி நிலவரம்:-
மராட்டியத்தில் 5 மணி நிலவரப்படி 58.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜார்கண்ட் மாநிலத்தில் 5 மணி நிலவரப்படி 67.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மராட்டிய சட்டசபை தேர்தல்: மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார்.
மராட்டிய சட்டசபை தேர்தல்: மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்புடன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வாக்களித்தார்.
மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது கணவர் சையிப் அலிகானுடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார்.
மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தெற்கு மும்பையின் வில்லா தெரசா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தாருடன் வந்து வாக்களித்தார்.
மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் உள்ள நந்த்கான் சட்டசபை தொகுதியில் சிவசேனா வேட்பாளர் சஹாஸ் காண்டே மற்றும் சுயேச்சை வேட்பாளர் சமீர் புஜ்பால் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோதலை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மராட்டிய சட்டசபை தேர்தல்: மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பாடகர் சங்கர் மகாதேவன் தனது குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடைபெற்று வருகிறது. அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் வாக்களித்தார்.
மராட்டிய சட்டசபை தேர்தல்: மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை ரகுல் பிரீத் சிங் தனது கணவர் ஜாக்கி பக்னானியுடன் வந்து வாக்களித்தார்.