'ராகுல் காந்தி ஒழுக்கமற்ற மாணவர் தலைவரைப் போல் நடந்து கொள்கிறார்' - பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி

ராகுல் காந்தி ஒழுக்கமற்ற மாணவர் தலைவரைப் போல் நடந்து கொள்கிறார் என பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி விமர்சித்துள்ளார்.

Update: 2024-07-02 12:06 GMT

போபால்,

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய நிலையில், இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி தனது உரையைத் தொடங்கினார்.

தொடர்ந்து பா.ஜ.க.வினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்று கூறிய ராகுல் காந்தி, தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் 24 மணி நேரமும் "வன்முறையிலும் வெறுப்பிலும்" ஈடுபடுகிறார்கள் என்றும், பா.ஜ.க.வினர் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதிகள் இல்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டார். இருப்பினும் பா.ஜ.க.வைப் பற்றியே பேசியதாக ராகுல் காந்தி தெரிவித்தார். அவரது பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி ஒழுக்கமற்ற மாணவர் தலைவரைப் போல் நடந்து கொள்கிறார் என பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான உமா பாரதி விமர்சித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"இந்துக்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களாகவும், வன்முறையை எதிர்கொள்பவர்களாகவும் இருந்து வருகின்றனர். நேற்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் நடத்தை மற்றும் பேச்சு ஒரு எதிர்க்கட்சி தலைவரைப் போல் இல்லாமல், ஒழுக்கமற்ற மாணவர் தலைவரைப் போல் இருந்தது.

எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை ராகுல் காந்தி நினைவில் கொள்ள வேண்டும். அவர் இப்போது ஒரு இளைஞர் இல்லை, 50 வயதைக் கடந்துவிட்டார். ராகுல் காந்தி தனது நிலை, தனது நாடு மற்றும் தனது வயதை கவனிக்க வேண்டும். முழு நாட்டு மக்களுடன் நானும் ராகுல் காந்தியை கண்டிக்கிறேன்."

இவ்வாறு உமா பாரதி பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்