பெண் டாக்டர் பலாத்கார வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு எதிராக சீல்டா கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு; 11-ந்தேதி விசாரணை

கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு எதிராக மேற்கு வங்காளத்தில் உள்ள சீல்டா கோர்ட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

Update: 2024-11-04 18:22 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு எதிராக புதிய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மேற்கு வங்காளத்தில் உள்ள சீல்டா கோர்ட்டு வழக்கு பதிவு செய்துள்ளது. இதுபற்றிய வழக்கு விசாரணை வருகிற 11-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த விவகாரத்தின் தீவிர தன்மையை கவனத்தில் கொண்டு வழக்கு அதிமுக்கியத்துவம் பெற்றுள்ளது. குற்றவாளிக்கு எதிராக சட்ட நடைமுறைகளை எடுப்பதன் வழியே, கோர்ட்டின் முடிவு ஒரு பெரிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.

இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு பின்னர் அடுத்தடுத்து பல்வேறு விசயங்கள் வெளிவந்தன. சந்தீப் கோஷ் தலைமையில் மருத்துவக்கல்லூரியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தது. இதற்காக அவருடைய இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் நீதி கோரி, டாக்டர்களில் ஒரு சிலர் உண்ணாவிரத போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டனர். தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் சிலருக்கு உடல்நல பாதிப்பும் ஏற்பட்டது. தீபாவளி கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்தபோதும், பெண் டாக்டருக்கு ஆதரவான பொதுமக்களின் அமைதி போராட்டமும் தொடர்ந்தது.

இந்நிலையில், ஜூனியர் டாக்டரான ராஜ்தீப் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலையுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சி.பி.ஐ. கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

குற்றப்பத்திரிகையில், தொடக்கத்தில் குறிப்பிடப்படாமல் விடப்பட்ட பெயர்கள் உள்ளடக்கிய ஒரு விரிவான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வருகிற 9-ந்தேதியுடன் இந்த சம்பவம் நடந்து 90 நாட்கள் ஆகவுள்ள சூழலில், நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும். அன்றைய தினம், இந்த வழக்கில் இதுவரை நடந்த மிகப்பெரிய விசயங்கள் எல்லாவற்றையும் காட்சிப்படுத்துவோம் என்றும் அவர் உறுதியுடன் கூறினார். கடந்த 22-ந்தேதி, முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் நடந்த 2 மணிநேர சந்திப்புக்கு பின்னர் ஜூனியர் டாக்டர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், போராட்டம் இத்துடன் முடிந்து விடாது என்றும், நீதி வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஜூனியர் டாக்டர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்