அய்யப்பனை தரிசிக்க 25, 26-ந் தேதிகளில் குறைவான பக்தர்களுக்கே அனுமதி
24-ந் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு (70,000) ஏற்கனவே முடிந்து விட்டது.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு அய்யப்பசாமிக்கு தங்க அங்கி அணிவித்து அலங்கார தீபாராதனை நடைபெறும்.
தற்போது ஆன்லைன் முன்பதிவு மூலம் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன்பதிவு மூலம் தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 96 ஆயிரத்து 853 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் உடனடி தரிசன முன்பதிவு மூலமாக மட்டும் 22 ஆயிரத்து 703 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
மேலும் 24-ந் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு (70,000) ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், 25, 26-ந் தேதிகளுக்கான முன்பதிவு நடந்து வருகிறது. இந்த 2 நாட்களும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 25-ந் தேதி 50 ஆயிரம் பேருக்கும், 26-ந் தேதி மண்டல பூஜை நாளில் 60 ஆயிரம் பேருக்கும் ஆன்லைன் முன்பதிவு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர உடனடி தரிசன பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.