கேரள மக்களின் மனதில் நீங்காத வடுவாக பதிவான வயநாடு நிலச்சரிவு
பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவு, கேரளத்தின் மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
கேரள வரலாற்றில் மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாக வயநாடு நிலச்சரிவு அமைந்துள்ளது.
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் கடந்த ஜூலை 30-ம் தேதி பெருமழையை தொடர்ந்து வயநாடு மாவட்டத்தில் பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த இயற்கை பேரிடரில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயம் அடைந்தனர். உறவுகளையும் உடமைகளையும் கண்முன்னே பறிகொடுத்து உயிர் தப்பிய நூற்றுக்கணக்கானவர்களின் அழுகுரல் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. இந்த பேரழிவானது மக்களின் மனதில் நீங்காத வடுவாக பதிவாகி உள்ளது.
நிலச்சரிவுகளில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உருக்குலைந்தன. வீடுகள் புதையுண்டதோடு, பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன.
ஜூலை 29 வரை சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவைப் பெற்ற வயநாடு மாவட்டம், ஜூலை 30, 31ஆம் தேதிகளில் மட்டும் 572 மில்லிமீட்டர் மழைப்பொழிவைப் பெற்றது. ஆனால் இதே காலக்கட்டத்தில் 64-124 மில்லிமீட்டர்கள் மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்கணித்திருந்தது. ஜூலையில் ஏற்கெனவே பொழிந்த மழையால் மண்ணின் உறுதித்தன்மை குறைந்திருந்த வேளையில், மிகக் குறுகிய கால இடைவெளியில் பெய்த அதிகனமழை நிலச்சரிவுக்குக் காரணமாக அமைந்துவிட்டது என துறை சார் வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.
வயநாடு கேரளாவின் முக்கியச் சுற்றுலாத் தலமாக திகழ்வதால் ஏராளமான சுற்றுலா விடுதிகள் மலைச்சரிவுகளில் கட்டப்பட்டிருந்தன. கேரளாவுக்கு சுற்றுலா செல்வோர் வயநாடு செல்வது உண்டு. வாகனங்கள் சென்று வருவதற்காக புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இப்படி வனத்தை அதன் இயல்புக்கு மீறி சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் போர்வையில் அழித்ததாலேயே இந்த முறை தென்மேற்கு பருவமழைக்கு மண் தன்னுடைய பிடிமானத்தை விட்டதால் அதன் இடைவெளி விரிசல்களில் மழைநீர் புகுந்து மண் சரிவு ஏற்பட்டதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நிவாரண நிதி வாங்கக்கூட வாரிசுகள் இல்லை
நிலச்சரிவில் சிக்கிய உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கேரள அரசு சார்பில் தலா ரூ. 6 லட்சமும், மத்திய அரசின் பிரதமர் பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 2 லட்சமும் அறிவிக்கப்பட்டது. இரு அரசுகளும் அறிவித்துள்ள நிவாரணநிதியைக் கோருவதற்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த வாரிசுகள் யாரும் முன்வராதது சோகத்தை ஏற்படுத்தியது.
2 உயிரை காப்பாற்றிய யானைகள்..
சூரல்மலையைச் சேர்ந்த சுஜாதாவும் அவரின் பேத்தி மிருதுளாவும் கடந்த 30 ஆம் தேதி வழக்கம் போல தங்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அன்றிரவு பலத்த மழை காரணமாக தண்ணீர் வீட்டுக்குள் புகுந்தது. தண்ணீர் புகுந்ததால் காப்பாற்றும்படி தனது பேத்தி அழுகுரல் கேட்டதும், பேத்தியை கையில் பிடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சில நொடிகளில் சுஜாதாவின் வீடு இடிந்து தரைமட்டமானது.
அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி சென்ற போது அந்த குடியிருப்பும் இடிந்து விழுந்துள்ளது. திரும்பும் திசையெல்லாம் மழையும், சகதியும், மரக்கிளைகளுமாக இருந்த அந்த இரவில் எங்கே கால்வைக்கிறோம் என தெரியாமல் இருவரும் நடந்து மேடான பகுதி நோக்கி சென்றனர். சூரல்மலையில் இருந்து உயரமான பகுதியை நோக்கி சுஜாதாவும் அவரின் பேத்தி மிருதுளாவும் நடந்து சென்று காப்பி தோட்டம் ஒன்றில் தஞ்சம் புகுந்தனர்.
சில நிமிடங்களில் தாங்கள் நடந்து வந்த பகுதிகளில் வெள்ளமும் சகதியும் பெருக்கெடுத்தது. தொடர்ந்து முன்னேறிய சுஜாதாவும் அவரின் பேத்திக்கும் காத்திருந்தது அதிர்ச்சி. தங்களுக்கு மிக அருகிலேயே 3 யானைகள் நின்றிருந்தன, அதனைக் கண்டு அதிர்ந்த சுஜாதா, பனை மரம் ஒன்றின் கீழ் தனது பேத்தியை பிடித்தபடி யானைகள் முன் மண்டியிட்டுள்ளார். ஏற்கனவே தாங்கள் பெரிய துயரத்தை சந்தித்துள்ளதாகவும், தங்களை தாக்க வேண்டாம் என யானைகளிடம் கெஞ்சியதாக பாட்டி தெரிவித்துள்ளார்.
தனது உணர்வுகளை புரிந்து கொண்ட யானைகள் கண்ணீருடன் காதை அசைத்தபடி நின்றிருந்ததாக பாட்டி நெகிழ்ச்சியுடன் கூறியது மனதை நெகிழ வைக்கிறது. சுற்றிலும் இருள் சூழ்ந்த பகுதியில் உதவி கேட்டு யானையிடம் மன்றாடிய பாட்டியும், பேத்தியையும் யானைக்கூட்டம் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக நின்றன. காலை 6 மணிக்கு வெளிச்சம் வரும் வரையில் அரணாக நின்ற யானைக்கூட்டம், மீட்புப் பணியினர் வந்ததும் அங்கிருந்து விலகிச்சென்றுவிட்டது. நிலச்சரிவின்போது உயிரை காப்பாற்றிக்கொள்ள சென்ற பாட்டிக்கும் பேத்திக்கும் பாதுகாப்பாக 3 யானைகள் நின்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.
விலங்குகளும் தப்பவில்லை
வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராங்களில் கடந்த 30-ம் தேதி அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இத்துடன் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியது. இந்த காட்டாற்று வெள்ளம் வனப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. அங்கு காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன. அவை அருகில் உள்ள சாலியாற்றில் தத்தளித்து சென்றதாக உள்ளூர்வாசிகள் கூறினர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மான்கள் செத்து கிடந்தன.
இது முதல் முறை அல்ல..
கடவுளின் தேசத்தில் இதுபோன்று பேரிடர் ஏற்படுவது முதல் முறை அல்ல. பல்வேறு தருணங்களில் மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்தது. அப்போது 483 பேர் உயிரிழந்தனர். பிறகு 2019-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 121 பேர் உயிரிழந்தனர். அப்படி இருந்தும் கேரளா அரசு பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதையடுத்து, கேரளா அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கேரளாவிற்கு உதவிய அண்டை மாநிலங்கள்
தமிழக அரசு நிவாரணப் பணிகளுக்காக ரூ.5 கோடி வழங்கியும் மருத்துவம் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பி வைத்தது. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார். பீகார், மராட்டியம்,ஜார்கண்ட்,மேற்கு வங்காளம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் கேரளாவிற்கு நிவாரணத்தொகையை வழங்கியது.
நிலச்சரிவில் இருந்து மீண்ட மக்களுக்கு உதவும் வகையிலும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையிலும், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், பள்ளி மாணவர் -மாணவிகள் என நன்கொடையை வாரி வழங்கினர்.
இஸ்ரோ வெளியிட்ட வயநாடு பேரழிவு புகைப்படம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ் தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள 'தேசிய சென்சிங் சென்டர்' (என்.ஆர்.எஸ்.சி.)மூலம், இந்தியாவுக்கு சொந்தமான மேம்பட்ட'கார்டோசாட்-3 ஆப்டிகல்' செயற்கை கோளையும், மேகத்தை ஊடுருவ பார்க்கும் திறன் கொண்ட 'ரிசாட்' செயற்கைக்கோளையும் பயன்படுத்தி வயநாடு பேரழிவு தொடர்பான சில புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது.
அதில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு கடல் மட்டத்தில் இருந்து 1,550 மீட்டர் உயரத்தில் உருவாகி உள்ளது. நிலச்சரிவால் அடித்து செல்லப்பட்ட குப்பைகளின் ஓட்டம் ஆற்றின் போக்கை விரிவுப்படுத்தி ஒரு பேரழிவை ஏற்படுத்தியை இந்த படங்கள் விளக்குகின்றன. அதே இடத்தில் பழைய நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதையும் இந்த செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பெய்லி பாலம்
வயநாட்டில் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட மலைக்கிராமங்களை இணைத்து, மீட்பு பணிகளை துரிதப்படுத்த 20 மணி நேரத்தில் தற்காலிக பெய்லி பாலத்தை ராணுவத்தினர் அமைத்தனர். அந்த பாலத்தில் ராணுவ வாகனங்கள், பொக்லைன் எந்திரங்கள் சென்றன.
10 நாட்களுக்கும் மேலாக ஓய்வின்றி துணிச்சலாக மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு உள்ளூர் மக்கள் நன்றி கூறி பிரியா விடை அளித்தனர்.
வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த சூரல்மலையை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஸ்ருதிக்கு சமீபத்தில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் எழுத்தராக அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.