உலகம்: 2024-ம் ஆண்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் - ஒரு பார்வை
2024-ம் ஆண்டில் உலக அளவில் நடந்த அரசியல் மாற்றங்கள், தேர்தல்கள், தலைவர்களின் வெளிநாட்டு பயணங்கள், இயற்கை பேரிடர்கள், அழகி போட்டிகள் உள்ளிட்டவற்றின் தொகுப்புகளை காணலாம்.;
ஜனவரி 2: ஜப்பானின் மேற்கு பகுதியில் இஷிகாவா மாகாணத்தின் வஜிமா நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இதனை தொடர்ந்து 150 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவாகி இருந்தன. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. நிலநடுக்கங்களால் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா உள்ளிட்ட பல மாகாணங்கள் குலுங்கின. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்துக்கு 55 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
ஜனவரி 9: மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தங்கள் நாட்டுக்கு அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் கோரிக்கை வைத்தார். சீனாவின் புஜியான் மாகாணத்தில் நடைபெற்ற மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கொரோனாவுக்கு முன்னர் மாலத்தீவின் முதல் சுற்றுலா சந்தையாக சீனா இருந்தது. இந்த நிலையை சீனா மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தவேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்று கூறினார். எனினும் மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023-ம் ஆண்டில் மாலத்தீவுக்கான மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 21: உலகின் பெரிய பணக்கார அரசியல்வாதியாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் விளங்குகிறார். அவரது அதிகாரப்பூர்வ ஆண்டு வருமானம் 1.4 லட்சம் டாலர்கள். அது இந்திய மதிப்புப்படி ரூ.1 கோடி. 2012-ம் ஆண்டு முதல் ரஷியாவின் அதிபராக இருக்கும் புதினின் மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்கள். அது இந்திய மதிப்புப்படி ரூபாய் 16 லட்சம் கோடி.
ஜனவரி 29: போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்கை பின்னுக்குத்தள்ளி பிரான்ஸ் நாட்டை சார்ந்த எல்.வி.எம்.எச். குழும தலைவர் பெர்னார்ட் அர்னால்டு முதலிடம் பிடித்துள்ளார்.
பிப்ரவரி 8: பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மாரேபேவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைப்பு விடப்பட்டது. அதன்படி அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்ற அவர் அங்குள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் பசிபிக் நாடுகளின் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
பிப்ரவரி 29: உலகில் அருகிவரும் உயிரினங்களில் ஒன்றாக மீகாங் ஐராவதி என்னும் டால்பின் இனம் உள்ளது. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் இதனை அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த நிலையில் கம்போடியா கடற்கரையில் ஐராவதி இன டால்பின் குட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட 3-வது ஐராவதி டால்பின் குட்டி ஆகும்.
பிப்ரவரி 29: ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரை பகுதியில் மொரீசியஸ் நாடு அமைந்துள்ளது. தீவு நாடான அங்கு 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் 70 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். அதில் தமிழ் வம்சாவளியினர் 6 சதவீதம் பேர். மொரீசியசின் பிரதமராக இந்திய வம்சாவளியை சார்ந்த பிரவிந்த் ஜூக்நாத் பதவி வகிக்கிறார். இதன் காரணமாக இந்தியா - மொரீசியஸ் இடையே நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் உதவியுடன் மொரீசியசின் அகலேகா தீவில் புதிய விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 5: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் 1907-ம் ஆண்டு பிறந்தவர் மரியா பிரன்யாஸ். இவர் 2-ம் உலகப்போர், புளு காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று போன்ற பல்வேறு சவால்களை கடந்து தற்போது உலகின் வயதான மனிதராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், மார்ச் 4-ம் தேதி தனது 117-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதன்மூலம் உலகின் அதிக வயதானவராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
மார்ச் 7: நேட்டோ உறுப்பு நாடுகளான துருக்கி மற்றும் ஹங்கேரி நாடுகள் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், சுவீடன் நேட்டோவில் இணைய சம்மதம் தெரிவித்தன. இதனையடுத்து தற்போது, நேட்டோவில் 32-வது நாடாக சுவீடன் இணைந்துள்ளது.
மார்ச் 9: பாகிஸ்தானில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. இதில் ஷபாஸ் ஷெரீப் 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வெற்றி பெற்று ஆசிப் அலி சர்தாரி 2-வது முறையாக அதிபராக தேர்வானார். பாகிஸ்தான் வரலாற்றில் ஒருவர் 2-வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
மார்ச் 30: உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' உடன் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் அமெரிக்க கடற்படை கையெழுத்திட்டது. இதன்மூலம் எம்.கியூ-25 ஸ்டிங்ரே என்கிற வான்வழி எரிபொருள் நிரப்பும் டிரோன்களை அந்த நிறுவனத்திடம் இருந்து அமெரிக்கா வாங்குகிறது. இந்த பணிகள் வருகிற 2028-ம் ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 3: உலக பெரும் பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இந்த தரவரிசையில், லூயி உட்டான் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 233 பில்லியன் டாலராகும். இந்தியாவின் முகேஷ் அம்பானி 9-வது இடத்திலும், கவுதம் அதானி 17-வது இடத்திலும் உள்ளனர்.
ஏப்ரல் 11: உலகில் உள்ள 100 நாடுகளில் நடைபெறும் பல்வேறு வகையான இணையவழி குற்றங்கள் தொடர்பாக 'உலக இணைய குற்ற குறியீடு' என்ற ஆய்வறிக்கையை சர்வதேச ஆராய்ச்சி குழுவினர் வெளியிட்டனர். அதில் உலகளவில் இணைய வழி குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ரஷியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இணையவழியில் முன்பணம் செலுத்தினால் அதிக பரிசுத்தொகை கிடைக்கும் என பொதுமக்கள் ஏமாறும் மோசடிகளே அதிகளவு நடைபெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 24: கடந்த 2023-ம் ஆண்டில், ராணுவ கட்டமைப்புக்கு உலக அளவில் 2 ஆயிரத்து 443 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சுவீடனை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதில், ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2-ம் இடத்திலும், ரஷியா 3-ம் இடத்திலும், இந்தியா 4-வது இடத்திலும் உள்ளன. 2023-ம் ஆண்டில் இந்தியா ராணுவத்துக்காக ரூ.6.9 லட்சம் கோடி செலவிட்டுள்ளது.
ஏப்ரல் 27: உலக அளவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரபஞ்ச அழகிப்போட்டிகளில் 18 முதல் 28 வயது வரையிலான இளம்பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். கடந்த ஆண்டு இந்த வயது வரம்பை பிரபஞ்ச அழகிப்போட்டி அமைப்பு நீக்கியது. இந்த நிலையில் அர்ஜென்டினாவில் பிரபஞ்ச அழகிப்போட்டி நடைபெற்றது. அதில் அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற 60 வயது பெண் வெற்றி பெற்று அசத்தினார். இதன்மூலம் அழகிப்போட்டியில் அதிக வயதில் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
மே 3: டென்மார்க் நாட்டில் 50 ஆண்டுகளுக்கு பிறகு கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, 18 வாரங்கள் வரையுள்ள கருவை கலைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு 12 வாரங்கள் வரையுள்ள கருவை மட்டுமே கலைக்க முடியும் என்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மே 11: ஐ.நா. சபையில் உறுப்பினராக சேர பாலஸ்தீனம் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில் பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அந்தஸ்து அளிக்கும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. 193 உறுப்பு நாடுகளில், 143 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்ததால் இந்த தீர்மானம் ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
மே 20: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மேற்கு அஜர்பைஜானில் நடைபெற்ற அணைக்கட்டு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஹெலிகாப்டரில் திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இந்தியா சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஈரானின் இடைக்கால அதிபராக அந்நாட்டின் துணை அதிபராக இருந்த முகமது மொக்பர் தேர்வு செய்யப்பட்டார்.
ஜூன் 12: காங்கோவின் புதிய பிரதமராக ஜூடித் சுமின்வாதுலுக்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கோ நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை ஜூடித் சுமின்வாதுலுக்கா பெற்றார்.
ஜூன் 15: தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 40 சதவீத இடங்களை மட்டுமே பெற்றது. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் புதிய அதிபராக மீண்டும் சிறில் ராமபோசா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜூலை 6: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த பின்பு நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் முன்னாள் நிதி மந்திரி மசூத் பெசெஸ்கியன் 53.70 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்று ஈரானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜூலை 16: அமெரிக்காவில் பொதுத்தேர்தலை முன்னிட்டு, குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும் அந்த கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜேம்ஸ் டேவிட் வென்சி தேர்வு செய்யப்பட்டார்.
ஜூலை 29: தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட பிரதமர் நிகோலஸ் மதுரோ 53.67 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆகஸ்டு 7: பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததும், ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாயா சின்வார் நியமிக்கப்பட்டார்.
ஆகஸ்டு 8: வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்றார்.
ஆகஸ்டு 22: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானா, வைர உற்பத்தியில் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்நாட்டின் கரோவே நகரில் உள்ள வைர சுரங்கத்தில் 2 ஆயிரத்து 492 காரட் எடையுள்ள மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் ஆகும். மேலும் உலகின் 2-வது பெரிய வைரம் என்ற பெருமையையும் பெற்றது.
ஆகஸ்டு 27: கத்தார் மற்றும் குவைத் இடையே இயற்கை எரிவாயு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு சுமார் 30 லட்சம் டன் வரையிலான இயற்கை எரிவாயுவை குவைத்துக்கு கத்தார் வழங்க உள்ளது.
செப்டம்பர் 6: பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியரை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நியமித்தார். நாட்டின் மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை மைக்கேல் பார்னியர் பெற்றார்.
செப்டம்பர் 22: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 2-வது சுற்று ஓட்டு எண்ணிக்கையில் தேசிய மக்கள் சக்தி முன்னணி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்வானார். இதன்மூலம் நாட்டின் 9-வது மற்றும் முதல் இடதுசாரி அதிபர் என்ற பெருமையை இவர் பெற்றார். இதனையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரியா நியமிக்கப்பட்டார்.
செப்டம்பர் 27: சிங்கப்பூரில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், முதன்முறையாக 60 லட்சம் மக்கள்தொகையை கடந்ததாக சிங்கப்பூர் அரசு தெரிவித்தது. அதில் 10 லட்சத்து 84 ஆயிரம் பேர் வெளிநாட்டு வம்சாவளியை சேர்ந்தவர்கள்.
அக்டோபர் 6: ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற 'மிஸ் ரஷியா-2024' அழகி போட்டியில் வாலன்டினா அலெக்ஸியேவா பட்டம் வென்றார். இதனால், இந்த ஆண்டில் நடைபெற உள்ள 'உலக அழகி' போட்டியில் ரஷியா சார்பில் இவர் பங்கேற்க உள்ளார்.
அக்டோபர் 20: இந்தோனேசியாவின் 8-வது அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்று கொண்டார். துணை அதிபராக ஜிப்ரான் ரகாபுமிங் ராக்கா பதவியேற்றார்.
அக்டோபர் 29: லெபனான் நாட்டின் சக்தி வாய்ந்த ஆயுத குழுவான ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பின்னர் புதிய தலைவராக மதகுரு நயீம் காஸிம் நியமிக்கப்பட்டார்.
நவம்பர் 6: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 50 மாகாணங்களில் உள்ள 538 தேர்தல் பிரதிநிதிகள் ஓட்டுகளில் 312 வாக்குகளை பெற்று குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 226 வாக்குகளை பெற்றார். இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்க உள்ளார்.
நவம்பர் 6:: 67-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடைபெற்றது. அதில் 'நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழக பிரதிநிதியாக சபாநாயகர் மு. அப்பாவு கலந்து கொண்டார்.
நவம்பர் 11: தாய்லாந்து நாட்டு சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ விளம்பர தூதராகவும், ஆலோசகராகவும் நடிகர் சோனு சூட் நியமிக்கப்பட்டார்.
நவம்பர் 12: 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரபஞ்ச அழகி போட்டி தென் ஆப்பிரிக்காவின் கிம்பர்லி நகரில் நடைபெற்றது. அதில் ஒடிசாவை சேர்ந்த திரிஷ்னா ரே என்ற கல்லூரி மாணவி வெற்றி பெற்று மகுடம் சூடினார்.
நவம்பர் 17: அரசுமுறை பயணமாக நைஜீரியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் 2-வது உயரிய விருதான 'கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி நைஜர்' விருது வழங்கப்பட்டது. இந்த விருது பெறும் 2-வது வெளிநாட்டு தலைவர் பிரதமர் மோடி ஆவார். இதற்கு முன்பு 1969-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
நவம்பர் 21: 2-வது இந்தியா-கேரிகோம் உச்சி மாநாடு கயானா நாட்டின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு, கயானா நாட்டின் உயரிய விருதான 'தி ஆர்டர் ஆப் எக்சலன்ஸ்' வழங்கப்பட்டது. கேரிகோம் அமைப்பு கரீபிய பகுதியில் உள்ள 20 வளரும் நாடுகளை கொண்ட அமைப்பு ஆகும்.
டிசம்பர் 1: அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேலை புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் நியமித்துள்ளார். தற்போது எப்.பி.ஐ.யின் இயக்குனராக கிறிஸ்டோபர் ரே உள்ளார்.
டிசம்பர் 1: ரஷியாவில் 2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவம், பாதுகாப்புக்கு ரூ.12.30 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இது மொத்த பட்ஜெட்டில் 32.5 சதவீதம் ஆகும். இது இந்த ஆண்டுக்கான ராணுவ நிதியை காட்டிலும் 28 சதவீதம் அதிகமாகும்.
டிசம்பர் 12: சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென்னை வீழ்த்தி இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
டிசம்பர் 22: பிரதமர் மோடிக்கு, தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற குவைத் நாட்டின் உயரிய, குடிமக்களுக்கான விருது வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது. குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கி கவுரவம் அளித்துள்ளார்.