தமிழ்நாடு: 2024-ம் ஆண்டின் சில முக்கிய நிகழ்வுகள்

2024-ல் தமிழ்நாட்டில் நிகழ்ந்த இயற்கை சீற்றங்கள், விஷ சாராய மரணம், கொலை சம்பவங்கள் போன்றவை மக்கள் மனதில் நீங்காத காயத்தை ஏற்படுத்தி இருந்தது.

Update: 2024-12-26 02:48 GMT

தமிழ்நாடு: 2024-ம் ஆண்டின் சில முக்கிய நிகழ்வுகள்

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் இந்த 2024ம் வருடத்தில் நடந்த பல்வேறு மறக்க முடியாத நிகழ்வுகளும், பல முக்கிய சம்பவங்களும் மக்களை பெரிய அளவில் பாதித்துள்ளது.

அந்த வகையில் இயற்கை சீற்றங்கள், விஷ சாராய மரணம், கொலை சம்பவங்கள் போன்றவை மக்கள் மனதில் நீங்காத காயத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற அரசியல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்.


மக்களவைக்கான தேர்தல் (தமிழ்நாடு)

இந்தியாவின் 18வது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி அன்று நடந்தது. இத்தேர்தல் முடிவுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தேர்தல் முடிவுற்ற பின்னர் ஜூன் 4-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. இதில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது.

 

வாக்குப்பதிவு

ஏப்ரல் 19ம் தேதி அன்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் உத்தேசமாக 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். ஏப்ரல் 20ம் தேதி அன்று, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

மூன்றாவது முறையாக வெளியிடப்பட்ட இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

 தேர்தல் முடிவுகள்

தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியே வென்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரு மக்களவைத்தொகுதிகளைப் பெற்றதாலும்,நாம் தமிழர் கட்சி 8 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றதாலும் தேர்தல் ஆணையத்தால் ஏற்பு பெற்ற மாநில கட்சி எனும் தகுதியை பெற்றன. இத்தேர்தலில் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 43,458,875 பேர் ஆகும்.

சட்டமன்ற இடைத்தேர்தல்

காங்கிரசு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பிப்ரவரி 25, 22024 அன்று பா.ஜ.க.வில் இணைந்தார். இதனை தொடர்ந்து தனது காங்கிரஸ் உறுப்பினர் பொறுப்பையும், சட்ட மன்ற உறுப்பினர் பதவியையும் விட்டு விலகிவிட்டதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. இவரின் கடிதத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அப்பாவு விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பை வெளியிட்டார்.

விஜயதாரணி தனது உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு பா.ஜ.க.வில் சேர்ந்ததால் அத்தொகுதிக்கும் மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடந்தது. இதிலும் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வெற்றிபெற்றது.


தமிழகத்தை உலுக்கிய விஷ சாராய மரணம்

தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் நடைபெற்ற விஷச்சாராய மரணம். கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்தியதில் 68 பேர் பலியாகினர். தமிழகம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க. சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்தினர். இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு விசாரித்தது.

 

இந்த வழக்கு விசாரணையில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக தரப்பில் தனித்தனியாக வாதிடப்பட்டது. இந்த வாதங்களுக்கு பதிலளித்த தமிழக அரசுத்தரப்பில், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஆலோசனைகள் வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

மேலும் வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டி.எஸ்.பி. தலைமையில், 50 பேர் அடங்கிய 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை கைது செய்யப்பட்ட 24 பேரில் 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் கண்காணிப்பாளரும், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தநிலையில் கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த வழக்கில் விசாரணை ஏற்கெனவே முடிந்து விட்டது. எனவே சி.பி.ஐ.க்கு மாற்றத் தேவையில்லை என்றார்.

அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரிப்பதால் தமிழக அரசுக்கு என்ன ஆட்சேபம் இருக்கிறது? உங்களது விசாரணையில் திருப்தி இல்லை என்பதால்தான் ஐகோர்ட்டு இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றி உள்ளது. எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதனிடையே கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் ஜனவரி 6ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது.


பேரழிவு ஏற்படுத்திய பெஞ்சல் புயல்

பெஞ்சல் புயல் (Cyclone Fengal) என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகிய புயல் ஆகும். இது 2024 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது புயலும், 2024 -ம் ஆண்டின் நான்காவது புயலுமாகும்.

பெஞ்சல் என்பது சவூதி அரேபிய நாடு பரிந்துரைத்த பெயர். இப்புயல் 2024 நவம்பர் 30ம் தேதி அன்று பிற்பகல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் கணித்தது. இருப்பினும் இரவு 11.30 மணியளவில் புதுச்சேரி அருகே இப்புயல் கரையைக் கடந்தது. 

பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை மேற்கொண்டன. தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் 2024 நவம்பர் 26 ம் தேதியன்று மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்ட கலெக்டர்களுடன் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து நவம்பர் 28, 29 ஆகிய நாட்களில், தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியும், கள ஆய்வு கூட்டமும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. 2024 நவம்பர் 27ம் தேதி அன்று கன மழை பெய்த விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை , திருவாரூர், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்கள், திண்டுக்கல் கொடைக்கானல் ஒன்றியம் மட்டும் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. புயல் கரையை கடக்கும் பகுதி என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு நவம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் விடுமுறையை அறிவித்தார்.

 

புதுச்சேரி

2024 நவம்பர் 28 அன்று புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேரிடர் மேலாண்மை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு அவசர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை நிவாரண முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். புதுச்சேரியில் 24/7 கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து வந்ததால் புதுச்சேரியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு 2024 நவம்பர் 28 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இழப்பீடுகள்

2024 நவம்பர் 3ம் தேதி அன்று பெஞ்சல் புயலாலும், மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, புயலால் அதிக பாதிப்புகளை சந்தித்த கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கவும், வட தமிழ்நாடு மாவட்டங்களில் புயல் காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கவும், வீடுகள் சேதம், கால்நடைகள் இழப்பு போன்றவற்றுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

 

புதுச்சேரி மாநிலத்தில் புயலாலும், மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்படும் எனவும், புயல் காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்-அமைச்சர் ரெங்கசாமி அறிவித்தார்

பெஞ்சல் புயல் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்தியது, 12 உயிர்களைக் கொன்றது மற்றும் 14 மாவட்டங்களை பாதித்தது. கனமழைக்கு தயார் என்று தமிழக அரசு கூறினாலும், சிக்கலான மற்றும் மெதுவாக நகரும் சூறாவளி வானிலை நிபுணர்களுக்கும், நிர்வாகத்திற்கும் சவாலாக அமைந்தது.

வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவற்றின் தீவிரத்தன்மை காரணமாக தமிழ்நாடு தொடர் பேரிடர் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், மக்களின் உயிர் - வாழ்வாதாரம் - உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் உண்டாகி வருகிறது என்றும். நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லை என்றும் தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பெஞ்சல் புயல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6.675 கோடியை விடுவிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.


அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை

தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்வையிட்டுக்கொண்டிருந்த போது அவரை சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் ஆம்ஸ்ட்ராங், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 25க்கும் மேற்பட்ட குறவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். 

மேலும் இந்த கொலை வழக்கில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பு இருந்தது தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் தொடரும் என்கவுண்டனர்

தமிழகத்தில் தொடரும் கொலை, கொள்ளை சம்பவங்களால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக அரசு எதிர்கொண்டது. இதனையடுத்து சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணிக்காக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் வீடுகளுக்கே சென்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

 

அந்த வகையில் பல நாட்களாக போலீசார் தேடி வந்த ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதலில் அரிவாளால் வெட்ட தொடங்கிய முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். அடுத்ததாக கொலை, கொள்ளை என 59 வழக்குகளில் தொடர்புடைய காக்கா தோப்பு பாலாஜியும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சுட்டுப்பிடித்த போலீசார்

மற்றொரு என்கவுண்டர் தான் சீசிங் ராஜா, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக தேடி வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்ட போது தப்பிக்க முயன்றதாக கூறி போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என போலீசார் வழக்கை முடித்தனர்.


காங்கிரஸ் நிர்வாகி மர்ம மரணம்

திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்த ஜெயக்குமார் தன்சிங் காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் கடந்த மே மாதம் புகார் தெரிவித்தனர். மேலும் அவர் எழுதிய கடிதமும் சிக்கியது. இதனையடுத்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டதில் தோட்டத்தில் மர்மமான முறையில் எரிந்து நிலையில் சடலமாக அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. 

எனவே ஜெயக்குமாரை யாராவது கடத்தி சென்று கொலை செய்தனரா.? அல்லது தற்கொலை செய்தாரா என விசாரணை நடத்தப்பட்டது. பல கோணங்களில் விசாரணை நடத்தியும் கொலைக்கான காரணத்தை கண்டறியமுடியவில்லை. முதலில் தற்கொலை என கூறப்பட்ட நிலையில் அவரது உடலில் கல் கட்டப்பட்டு இருந்ததும், வாயில் பிரஸ் இருந்ததும் மர்மத்தை அதிகரித்தது. ஆனால் இன்றுவரை காங்கிரஸ் நிர்வாகி மரணம் தொடர்பான முடிச்சை போலீசாரால் அவிழ்க்க முடியாத நிலை நிலவுகிறது.


கவரைப்பேட்டை ரெயில் விபத்து

சென்னை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதியதில் சுமார் 13 பெட்டிகள் தடம்புரண்டன. ஒரு பெட்டியில் தீப்பிடித்தது.

இந்த விபத்து நேரிட்டது எப்படி?

திருவள்ளூர் கவரைப்பேட்டையில், கடந்த அக்.11ம் தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாக்மதி விரைவு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்த நிலையில், நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரெயில்வே காவல்துறையினர், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

லோகோ பைலட், தொழில்நுட்பப் பிரிவு, சிக்னல் பிரிவு, தண்டவாள பராமரிப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், ரெயில் மெயின் லைனுக்கு பதிலாக லூப் லைனில் மாறிச் சென்றதால், ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்து ஏற்பட்டு, ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டது தெரியவந்தது.

இதனையடுத்து, கவனக்குறைவாக செயல்படுதல், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல், காயங்கள் மற்றும் கடுமையான காயங்கள் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சுமார் 40 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

விசாரணையில் ரெயில் தடங்களில் இருந்த போல்ட்டுகள் மற்றும் நட்டுகள் கழட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சதிச் செயல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்ற பிரிவில் இந்திய ரெயில்வே சட்டத்தின் 150வது பிரிவை (ரெயிலை சேதப்படுத்துதல் அல்லது தகர்க்க முயற்சித்தல்) இவ்வழக்கில் ரெயில்வே போலீசார் கூடுதலாக சேர்த்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


தமிழ்நாட்டில் பரபரப்பாக நிகழ்ந்த சில அரசியல் நிகழ்வுகள்


தமிழக வெற்றிக் கழகம் - விஜய்யின் அரசியல் என்ட்ரி

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை புதுக்கோட்டையில் 26 ஜூன் 2009 அன்று தொடங்கினார் .

இந்த அமைப்பு 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்தது. ரசிகர் மன்ற அமைப்பு 2021 அக்டோபரில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, அவர்கள் போட்டியிட்ட 169 இடங்களில் 115 இடங்களில் வெற்றி பெற்றது.

* 2019ம் ஆண்டின் குடியுரிமை (திருத்தம்) சட்டம் நாட்டின் சமூக மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்பதால் அதை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று விஜய் அழைத்தார்

* 2 பிப்ரவரி 2024 அன்று, விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்குவதாக அறிவித்தார், மேலும் 2026 தேர்தலில் நுழைவதற்கான தனது விருப்பத்தையும் அவர் தெரிவித்தார். என்.ஆனந்த் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

* ஜூலை, 2024 இல், கிராமப்புற மாணவர்களுக்கு எதிரான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தடை செய்ய விஜய் அழைப்பு விடுத்தார். மேலும் கல்வி மற்றும் துப்புரவுத் துறைகளை ஒரே நேரத்தில் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுமாறு அவர் வலியுறுத்தினார் .

* செப்டம்பர் 4, 2024 இல், தமிழக வெற்றிக் கழகம் அம்பேத்கரிசம் , மார்க்சியம் மற்றும் பெரியாரியம் உள்ளிட்ட இடதுசாரி சார்பு அரசியல் சித்தாந்தங்களை ஏற்கும் என்றும் , வலதுசாரி நிலைப்பாடுகள் அல்லது சித்தாந்தங்களுடன் இணையாது என்றும் தெரிவிக்கப்பட்டது . தற்போதைய நிலையில் ஆளும் கட்சிகளான தமிழகத்தில் தி.மு.க. மற்றும் மத்தியில் பா.ஜ.க.வை அக்கட்சி எதிர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

* அக்டோபர் 27, 2024 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் கட்சியின் சித்தாந்தம் விரிவாக வெளிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது .

* அக்டோபர் 27, 2024 அன்று, தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தியது , இதில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

* அந்த மாநாட்டில் பெரியார் , அம்பேத்கர் , காமராஜ் , அஞ்சலி அம்மாள் மற்றும் வேலு நாச்சியார் போன்ற சமூக நீதித் தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கட்அவுட்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் சித்தாந்த வழிகாட்டி தலைவர்களாக இருப்பார்கள் என்று அறிவித்தனர் .

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் தனது கட்சியின் சித்தாந்தத்தை 'மதச்சார்பற்ற சமூக நீதி சித்தாந்தங்கள்' என்று வெளிப்படுத்தினார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பாலான அம்சங்களில் இடதுசாரி திராவிட நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று கூறினார். இரு மொழிக் கொள்கை, சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, சோசலிசம், சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற கொள்கைகளை கட்சி நிலைநிறுத்தும் என்று அவர் கூறினார்

* விஜய் நேரடியாக பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் அவரது கருத்துக்கள் அவர்களை இலக்காகக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

* ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் குடும்ப அரசியலை ஊக்குவித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக ஆளும் தி.மு..கவை தனது முதன்மை அரசியல் எதிரியாக பார்க்கும் அதே வேளையில், பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை ஊக்குவிக்கும் எந்தவொரு கட்சியையும் தனது கருத்தியல் எதிரியாக தமிழக வெற்றிக் கழகம் கருதுகிறது என்று அவர் வலியுறுத்தினார்

* நவம்பர் 3, 2024 அன்று, பாஜக மற்றும் திமுகவின் ஆட்சி மற்றும் கொள்கைகளுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் 26 தீர்மானங்களை நிறைவேற்றியது.

* தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியால், வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக இளைஞர்களின் வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட பெரிய கட்சிகள் தீவிரமாக ஈடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.


துணை முதல்-அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க.வில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த தமிழக துணை முதல்-அமைச்சர் பதவி விவகாரம், செப்., 29ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. அன்று தான் துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றி அமைக்கும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை கவர்னர் மாளிகை ஏற்றதாக அறிவித்தது. இதனைத்தொடந்து செப்.,29ம் தேதி புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

அதில் உதயநிதி ஸ்டாலின் இலாகா மாற்றம் இல்லாமல் துணை முதல்-அமைச்சரானார்.

 

திரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார்.

2019 ஜூலை 7 ம் தேதி அன்று திமுக இளைஞர் அணிச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். 2022-ம் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தன் தீவிர அரசியல் பயணத்தைத் தொடங்கிய 5-ம் ஆண்டில் (2024) 'துணை முதல்-அமைச்சர்' என்னும் பதவியைப் அவர் பெற்றிருக்கிறார்.

 

அவரைத்தொடர்ந்து செப். 29ம் தேதி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன் மற்றும் எஸ்.எம்.நாசர் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அமைச்சரின் துறைகள்:

அன்று புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஒதுக்கப்பட்டது. புதிய அமைச்சர்களாக பதவியேற்ற கோவி செழியனுக்கு உயர் கல்வித்துறையும், ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. முன்னதாக, பால்வளத்துறை அமைச்சராக இருந்து நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் அமைச்சராக பதவியேற்ற ஆவடி நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலகத் தமிழர் நலன் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

மேலும், அரசு தலைமைக் கொறடாவாக இருந்த கோவி செழியன் அமைச்சராக பதவி ஏற்ற நிலையில், குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கா.ராமசந்திரன், அரசுத் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்படுவதாக அரசு முதன்மைச் செயலாளர் கி.சீனிவாசன் அறிவித்தார்.

தந்தை-முதல் அமைச்சர், மகன் - துணை முதல்-அமைச்சர்

நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில் தந்தைக்கு பிறகு மகன் முதல்-அமைச்சராக வந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. தந்தை முதல்-அமைச்சராக இருக்கும்போதே துணை முதல்-அமைச்சராக மகன் பொறுப்பேற்ற நிகழ்வுகள் இதற்கு முன் இரண்டு முறை மட்டுமே நடந்துள்ளன. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, துணை முதல்-அமைச்சராக ஸ்டாலின் பதவி வகித்தார்.

பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் முதல்-மந்திரியாக இருந்தபோது, துணை முதல்-மந்திரியாக அவரது மகன் சுக்பீர் சிங் பாதல் பதவி வகித்தார். அதற்கு அடுத்தபடியாக, இப்போது தான், தந்தை முதல்-அமைச்சர், மகன் துணை முதல்-அமைச்சர் என்ற நிகழ்வு அரங்கேறியது.


மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி

கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு, அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது

.இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.இந்த கைது நடவடிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

 

தொடர்ந்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு 'பைபாஸ்' அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்றும் அவர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள், வெவ்வேறு அமைச்சருக்கு மாற்றி வழங்கப்பட்டன.அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்திவைத்தார். பின்னர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு கோர்ட்டு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவரால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பியது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டு இருந்தார்.

இந்த கடிதம், முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை கவர்னர் ஆர்.என்.ரவி. ஏற்றுக்கொண்டார். ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு விசாரணையின்போது புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்து இருந்தது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து. கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை முடிந்து 37 நாட்களுக்கு பிறகு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா மற்றும் ஏ.ஜி.மாசி ஆகியோர் தீர்ப்பளித்தனர். இதன்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

471 நாட்களுக்கு பின் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதன்படி செப். 26ம் தேதியன்று சுப்ரீம்கோர்ட்டு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். ரூ.25 லட்சம் பிணைத்தொகை செலுத்தி செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு அறிவித்திருந்தது.

 

இதனையடுத்து சிறையில் இருந்து ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன்படி செப் 29ம் தேதி செந்தில் பாலாஜி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதன்படி ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை, முதல் முறையாக அமைச்சர் பொறுப்பேற்கும் கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறை வழங்கப்பட்டது.

அதில் முறைப்படியாக துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.


பா.ஜ.க.வுடன் கட்சியை இணைத்துக்கொண்ட சரத் குமார்

2024 மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவும், அதிமுகவும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம், பார்வர்ட் ப்ளாக் கட்சிகள் மட்டும் அதிகாரப்பூர்வமாக இணைந்தன. பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

பாஜக கூட்டணியில் தமாகா, புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இணைந்தன. அதே சமயம் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியிடம் தி.மு.க. தவிர அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தனித் தனியாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தன. ஆனால், சரத்குமார் தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வந்தார். கூட்டணி தொடர்பாக சிறப்பான முடிவை எடுக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்வதாகவும் அறிவித்து இருந்தார்.

 

சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் நேரடியாக களம் காணமல் இருந்து வந்தது. 2009 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றது. 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது.

இந்த சூழலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த கட்சியின் தலைவர் சரத்குமார், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தனது கட்சியை கடந்த மார்ச் 12ம் தேதி திடீரென பா.ஜ.க.வோடு இணைத்துக் கொண்டதாக அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, பா.ஜ.க.வில் விருதுநகர் தொகுதியானது சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி, அவர் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் ராதிகா சரத்குமார் தோல்வியடைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.


தி.மு.க. கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம்

2024 மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியில் திமுகவுடன், மக்கள் நீதி மய்யம் கைகோர்த்தது. முன்னதாக தென்சென்னை மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளை கமல்ஹாசன் திமுகவிடம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், தங்களின் வலுவான தொகுதியான தென்சென்னையை விட்டுத்தர திமுக முன்வரவில்லை என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில்தான், மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, மக்களவை தேர்தலில் இக்கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என தி.மு.க. அறிவித்தது.

 

இந்த ஒப்பந்தம் இறுதியான பின்பு, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்றும் மாறாக, இக்கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த முடிவு பதவிக்கானது அல்ல என்றும் தேசத்திற்காக கைகோர்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல், அதிமுக, திமுக இரு கட்சிகளையும் விமர்சித்து வந்தார். 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. மக்களவை தேர்தலில் சுமார் 4 சதவீத வாக்குகளையும் சட்டமன்ற தேர்தலில் சுமார் 2.5 சதவீத வாக்குகளையும் பெற்றது. மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் சுமார் 1.5 லட்சம் வாக்குகளையும் தென் சென்னை தொகுதியில் சுமார் 1.44 லட்சம் வாக்குகளையும் அக்கட்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் சுமார் 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.


தமிழக சட்டமன்றம் 


தமிழக சட்டசபையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. பிப்ரவரி 15ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். அத்துடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. பிப்ரவரி 19ம் தேதி தமிழக அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து 20ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் மீது 22ம் தேதி வரை விவாதம் நடந்தது. இறுதியில் அமைச்சர்கள் பதில் அளித்து நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29ம் தேதி வரை 10 நாட்கள் நடந்தது.

பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் கூடியாக வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இதன்படி தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 9 மற்றும் 10 ஆகிய 2 நாட்கள் கூடியது. இதில் பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்த கூட்டம் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சட்டசபை கூட்டத் தொடரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முடித்து வைத்து உத்தரவிட்டார்.

 

இந்நிலையில் அடுத்த தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜன. 6-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளதாக பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, "2025-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜன. 6ம் தேதி நடைபெற உள்ளது. கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழுதான் முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 2025-ம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள், திங்கள்கிழமை, காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அப்போது, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரை நிகழ்த்த உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்