கால்பந்து முதல் செஸ் சாம்பியன்ஷிப் வரை... 2024-ல் கவனம் பெற்ற விளையாட்டு நிகழ்வுகள்..!

கால்பந்து உலகக்கோப்பையில் இந்திய அணியை காண நினைத்த ரசிகர்களின் கனவு தகர்ந்து போனது.

Update: 2024-12-26 11:52 GMT

இந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து, டென்னிஸ், ஆக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட போட்டிகளின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து காணலாம்..

கால்பந்து: இந்திய ரசிகர்களின் கனவு தகர்ந்தது

2026-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் இந்திய அணி தோல்வி கண்டு உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இதனால் கால்பந்து உலகக்கோப்பையில் இந்திய அணியை காண நினைத்த ரசிகர்களின் கனவு தகர்ந்து போனது.



இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இகோர் ஸ்டிமாக்கை நீக்கி இந்திய கால்பந்து சம்மேளனம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.



ஆசிய கோப்பையில் தோல்வி:

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இதில் இந்தியா 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, சிரியா மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றது.

ஆஸ்திரேலியா, சிரியா, உஸ்பெகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக ஆடிய இந்தியா அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.இந்த போட்டிகளிலும் இந்திய வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது துரதிருஷ்டமே.

சுனில் சேத்ரி ஓய்வு:

இந்தியாவில் கால்பந்தாட்டம் என்றால் அதன் ஹீரோவாக கருதப்பட்டவர் பைசுங் பூட்டியா. அவருக்கு பின்பு பலராலும் பெரிதும் அறியப்படுபவர் சுனில் சேத்ரி. இந்திய கால்பந்தாட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றதும், தன்னுடைய தனிப்பட்ட சாதனையாலும் தேசத்துக்கு பெருமை சேர்த்தவர் சுனில் சேத்ரி.



உலக அளவில் அதிக கோல் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில் போர்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ மற்றும் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக, சுனில் சேத்ரி 83 கோல்களுடன் 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். சுனில் சேத்ரி. 150 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அணிக்காக 94 கோல்களை அடித்துள்ளார். தனது அபார திறமையால் கால்பந்து உலகில் தனக்கென தனி இடம் பிடித்த சுனில் சேத்ரி, இந்த ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார் .

சர்வதேச கால்பந்தில் பலோன் டி'ஆர் விருது:


கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதுகளில் ஒன்று பலோன் டி'ஆர் விருது. மெஸ்சி பார்சிலோனாவுக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிய காலத்தில் இருவரும்தான் இந்த விருதை மாறிமாறி வாங்கியிருப்பார்கள். அவர்கள் இருவருக்கிடையே கடும் போட்டி நிலவும். தற்போது மெஸ்சி அமெரிக்கா லீக்கில் விளையாடுகிறார். ரொனால்டோ சவுதி லீக்கில் விளையாடுகிறார். இந்த வருட விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் இருவருடைய பெயரும் இடம் பெறவில்லை. இந்த நிலையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார். 2023-24 சீசனில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார். தொடர்ந்து நான்காவது முறையாக மான்செஸ்டர் சிட்டி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 2024 யூரோ கோப்பையில் தனது நாடான ஸ்பெயின் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

சர்வதேச கால்பந்தில் சிறந்த வீரர்:

சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. பிபா வெளியிடும் இறுதிப்பட்டியலில் இருந்து சிறந்த வீரர், வீராங்கனை தேசிய அணியின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், கால்பந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கத்தார் தலைநகர் தோகாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதில், இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற 11 வீரர்களில் பிரேசில் வீரரும், ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுபவருமான வினிசியஸ் ஜூனியர் சிறந்த கால்பந்து வீரராக அறிவிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதை பெற்ற முதல் பிரேசில் வீரர் என்ற பெருமையை 24 வயது வினிசியஸ் ஜூனியர் பெற்றார். வாக்குகள் அடிப்படையில் அவருக்கு 48 புள்ளி கிடைத்தது. ஸ்பெயின் வீரர் ரோட்ரி 43 புள்ளிகளுடன் 2-வது இடமும், இங்கிலாந்து வீரர் ஜூட் பெலிங்ஹாம் 37 புள்ளிகளுடன் 3-வது இடமும் பெற்றனர்.

 சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் வீராங்கனை போன்மதி தொடர்ந்து 2-வது முறையாக தட்டிச் சென்றார்.


டென்னிஸ்:

கிராண்ட்ஸ்லாம் வென்ற ரோகன் போபண்ணா ஜோடி:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்றது. இந்த டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் இறுதி சுற்றில் ரோகன் போபண்ணா (இந்தியா) - மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி, இத்தாலியின் சிமோன் போலெலி - ஆன்ரீயா வவாசோரி இணையை சந்தித்தது. 1 மணி நேரம் 39 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 7-6, (7-0), 7-5 என்ற செட்களில் மோன் போலெலி - ஆன்ரீயா வவாசோரி ஜோடியை வீழ்த்தி ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் இணை சாம்பியன் பட்டம் வென்றது.இந்த வெற்றியின் மூலம் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோகன் போபண்ணா படைத்துள்ளார். அவர் 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.



ரபேல் நடால் ஓய்வு:

டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் .கடந்த 20 ஆண்டுகள் சர்வதேச டென்னிசில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ரபேல் நடால் 14 முறை பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.மேலும், 63 டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நடால் படைத்துள்ளார். 38 வயதான ரபேல் நடால் 14 முறை பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் வெற்றியையும் சேர்த்து மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



அமெரிக்க ஓபன் டென்னிஸ்;

2024 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னெர் 6-3, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

விம்பிள்டன் டென்னிஸ்: அல்காரஸ் சாம்பியன்

'கிராண்ட்ஸ்லாம்' வகை போட்டிகளில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் 2024 லண்டனில் நடந்தது. பெண்கள் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை கிரெஜ்சிகோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 3-ம்நிலை வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), முன்னாள் சாம்பியனான 2-ம்நிலை வீரர் நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்த்து மல்லுக்கட்டினர்.

2 மணி 27 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் அல்காரஸ் 6-2,6-2, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார். 21 வயதான அல்காரஸ் ருசித்த 4-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே பிரெஞ்சு ஓபன் (2024-ம் ஆண்டு), விம்பிள்டன் (2023), அமெரிக்க ஓபன் (2022) ஆகியவற்றை தலா ஒரு முறை வென்று இருக்கிறார். 'ஓபன் எரா' வரலாற்றில் (1968-ம் ஆண்டில் இருந்து) ரோஜர் பெடரருக்கு அடுத்து தனது முதல் 4 கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியிலும் தோல்வியே சந்திக்காமல் மகுடம் சூடிய 2-வது வீரர் என்ற சிறப்பை அல்காரஸ் பெற்றுள்ளார். அல்காரசுக்கு ரூ,29¼ கோடி பரிசுத்தொகையுடன், 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.



பேட்மிண்டன்:

பி.வி. சிந்து , லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. இதில், பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தின சுற்றில் இந்தியாவின் வீராங்கனையான பி.வி. சிந்து, சீன வீராங்கனையான ஹி பிங் ஜியாவோ என்பவரை எதிர்த்து விளையாடினார்.இந்த போட்டியில், 21-19, 21-14 என்ற செட் கணக்கில், சிந்துவை வீழ்த்தி ஜியாவோ வெற்றி பெற்றார். இதற்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றிருந்த சிந்து இந்த முறை தோல்வி அடைந்து வெளியேறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

ஆண்கள் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் லக்சயா சென் (இந்தியா) - விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய விக்டர் 22-20 மற்றும் 21-14 என்ற நேர் செட் கணக்கில் லக்சயா சென்னுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெற்றார்.

தோல்வியடைந்த லக்சயா சென் வெண்கல பதக்கத்துக்கான போட்டியிலும் தோல்வி அடைந்து பதக்க வாய்ப்பை தவறவிட்டார் .



சாத்விக் - சிராக்:

பாரீசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா- வூ யிக் சோ இணையுடன் மோதியது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் முதல் செட்டை இந்திய இணை கைப்பற்றியது. ஆனால் அடுத்த 2 செட்டுகளையும் மலேசியா இணை கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்த அதிர்ச்சி தோல்வியின் மூலம் சாத்விக் - சிராக் இணையின் ஒலிம்பிக் பதக்க கனவு முடிவடைந்தது.

பி.வி. சிந்து திருமணம்

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்தார் .


ஆக்கி:

இந்த வருடம் இந்திய ஆக்கிக்கு சிறப்பாகவே அமைந்தது. பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் அணி வெண்கல பதக்கம் கைப்பற்றி அசத்தியது.

இந்திய மகளிர் மற்றும் ஆண்கள் ஆக்கி அணி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதேபோல் ஜூனியர் மகளிர் மற்றும் ஆண்கள் ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணியே சாம்பியன் பட்டம் வென்றது.



ஸ்ரீஜேஷ் ஓய்வு:

பாரீஸ் ஒலிம்பிக் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக ஏற்கனவே ஸ்ரீஜேஷ் அறிவித்து இருந்தார். ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற கையோடு இந்திய ஆண்கள் அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆக்கி போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் : இந்திய ஆண்கள் மகளிர் அணிக்கு தங்கம்

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியது. ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.


உலக செஸ் சாம்பியன் குகேஷ்:

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. முடிவில் இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்த நிலையில், 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. 58-வது நகர்த்தலில் டிங் லிரெனை (7.5 - 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் தமிழக வீரரான குகேஷ் உலக சாம்பியன் ஆனார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.

உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி: 3 தங்கம் வென்ற தமிழக வீராங்கனை


6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழக வீராங்கனையான சென்னையை சேர்ந்த காசிமா (வயது 17) பங்கேற்றிருந்தார். இவர் மகளிர் தனிநபர், இரட்டையர், குழு என மூன்று பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து 3 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். காசிமா சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags:    

மேலும் செய்திகள்