மும்பையில் கார் மோதி 4 வயது சிறுவன் பலி - இளைஞர் கைது
மும்பையில் கார் மோதி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் வடாலா பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி அருகே, சாலையில் வேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஆயுஷ் லக்ஷ்மன் மீது மோதியது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
காரை ஓட்டி வந்த 19 வயதான சந்தீப் கோலே என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் தந்தை கூலி தொழிலாளி என்பதும், அவர்கள் சாலையோரம் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த 9-ந்தேதி மராட்டிய மாநிலத்தில் உள்ள குர்லா பகுதியில் மாநகராட்சி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 42 பேர் படுகாயமடைந்தனர். சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 5 ஆண்டுகளில் அதிக விபத்துகள் ஏற்பட்ட மாநிலமாக மராட்டிய மாநிலம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.