ஆந்திர பிரதேசத்தில் நிலநடுக்கம்: தட்டு, தம்ளர்கள் உருண்டன; வீட்டை விட்டு ஓடிய மக்கள்

ஆந்திர பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பயந்து மக்கள் வீடுகளை விட்டு ஓடி, தெருக்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.

Update: 2023-02-19 12:10 GMT



அமராவதி,


ஆந்திர பிரதேசத்தின் என்.டி.ஆர். மாவட்டத்தில் நந்திகாமம் கிராமத்தில் விடுமுறை நாளான இன்று காலை 7.13 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இந்நிலநடுக்கம் 3.4 வினாடிகள் வரை நீடித்து உள்ளது.

இதனால், அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளனர். இதுபற்றி நந்திகாமம் கிராமத்தில் வசிக்கும் நரசிம்ம ராவ் என்பவர் கூறும்போது, ஒரு சில வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது.

வீடுகளில் இருந்து மக்கள் பலர் வெளியே அலறியடித்தபடி ஓடி வந்தனர். சமீபத்தில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் எதிரொலியாக இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான விஞ்ஞானிகளின் கணிப்புகளால் பீதி தொற்றி கொண்டது என கூறியுள்ளார்.

நான் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்போது, சில வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதும், பயத்தில் நாங்கள் வெளியே ஓடி வந்தோம். வீட்டில் வைத்திருந்த தட்டு, தம்ளர், கிண்ணங்கள் என பாத்திரங்கள் அனைத்தும் உருண்டோடின. அதனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டோம் என திகிலுடன் கூறுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்