13 வயது சிறுமி பலாத்காரம், படுகொலை; அரித்துவார் நெடுஞ்சாலையில் உடல் வீச்சு

பா.ஜ.க. பிரமுகர் ஆதித்யராஜ் சைனி மற்றும் அவருடைய கூட்டாளியால் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு உள்ளார் என சிறுமியின் தாயார் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Update: 2024-06-26 13:18 GMT

அரித்துவார்,

உத்தரகாண்டின் அரித்துவார் மாவட்டத்தில் பகதராபாத் கிராமத்திற்கு அருகே நெடுஞ்சாலையில் 13 வயது சிறுமியின் உடல் ஒன்றை நேற்று காலை போலீசார் கண்டெடுத்தனர். பதஞ்சலி ஆராய்ச்சி மையம் அருகே கிடந்த உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் பா.ஜ.க.வின் உள்ளூர் பிரமுகரான ஆதித்யராஜ் சைனி மற்றும் அவருடைய கூட்டாளியால் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என சிறுமியின் தாயார் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

இதுபற்றி சிறுமியின் தாயார் அளித்த புகாரில், கிராம தலைவரின் மனைவியான ஆதித்யராஜ், சிறுமியிடம் நைசாக பேசி தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். கடந்த ஞாயிற்று கிழமை மாலையில் சிறுமி காணாமல் போய் விட்டார். சிறுமியை தாய் மொபைல் போனில் அழைத்துள்ளார்.

அதனை எடுத்து பேசிய ஆதித்யராஜ், சிறுமி தன்னுடனேயே இருக்கிறாள் என கூறியிருக்கிறார். அதன்பின்னர், போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு விட்டது. அடுத்த நாள் காலையிலும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால், அச்சமடைந்த சிறுமியின் தாயார் ஆதித்யராஜ் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அமித் சைனியும் இருந்திருக்கிறார். ஆனால் சிறுமியை காணவில்லை. இதுபற்றி போலீசாரிடம் புகார் அளிக்க போகிறேன் என சிறுமியின் தாயார் கூறியதும், போலீசுக்கு போக வேண்டாம் என ஆதித்யராஜ் நெருக்கடி கொடுத்திருக்கிறார். அப்படி போனால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியிருக்கிறார்.

எனினும், சிறுமியின் தாயார் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். சிறுமியின் உடல் நேற்று கிடைத்ததும், ஆதித்யராஜ் மற்றும் அமித் ஆகிய இருவரால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என சிறுமியின் தாயார் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.

அவருடைய புகாரின் பேரில் 2 பேருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் போலீசார் 5 தனிப்படைகளை அமைத்து உள்ளனர் என எஸ்.பி. பிரமேந்திரா தோபால் கூறினார்.

இந்த விவகாரம் தெரிய வந்ததும், மாநில பா.ஜ.க. பொது செயலாளர் ஆதித்ய கோத்தாரி வெளியிட்ட கடிதத்தின் அடிப்படையில், கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆதித்யராஜ் நீக்கப்பட்டு உள்ளார் என தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்