வெங்கையா நாயுடுவின் சுயசரிதை புத்தகங்கள் - பிரதமர் மோடி வெளியிடுகிறார்
வெங்கையா நாயுடுவின் சுயசரிதை தொடர்பான 3 புத்தகங்களை பிரதமர் மோடி நாளை வெளியிட உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றவர் வெங்கையா நாயுடு. இவர் ஆகஸ்ட் 11, 2017 முதல் ஆகஸ்ட் 10, 2022 வரை துணை ஜனாதிபதியாக பதவி வகித்தார். வெங்கையா நாயுடு நாளை தனது 75-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு வெங்கையா நாயுடுவின் சுயசரிதை தொடர்பான 3 புத்தகங்களை பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி வாயிலாக வெளியிட உள்ளார்.
இதன்படி முன்னாள் நாளிதழ் ஆசிரியர் எஸ்.நாகேஷ் குமார் எழுதிய 'வெங்கையா நாயுடு- லைப் இன் சர்வீஸ்' என்ற வாழ்க்கை வரலாறு புத்தகம், வெங்கையா நாயுடுவின் முன்னாள் செயலாளரான சுப்பா ராவின், 'செலிபிரேட்டிங் பாரத்- இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு' என்ற புகைப்பட தொகுப்பு புத்தகம், தெலுங்கு மொழியில் சஞ்சய் கிஷோர் எழுதிய, 'மகாநேடா - வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை மற்றும் பயணம்' என்ற புத்தகம் ஆகிய 3 புத்தகங்களை பிரதமர் மோடி நாளை வெளியிட உள்ளார்.