கண்ணீர் கடலில் தமிழகம்... பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்த் உடல்...லைவ் அப்டேட்ஸ்


தினத்தந்தி 28 Dec 2023 10:14 AM IST (Updated: 29 Dec 2023 12:10 AM IST)
t-max-icont-min-icon

விஜயகாந்தின் இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Live Updates

  • 28 Dec 2023 4:47 PM IST

    மூத்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவு செய்தியறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல் என ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

  • 28 Dec 2023 4:00 PM IST

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

  • 28 Dec 2023 3:34 PM IST

    நடிகர் விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் உடலைப் பார்த்ததும் துக்கம் தாங்காமல் பொதுமக்கள் தலையிலும், வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது.

  • 28 Dec 2023 3:09 PM IST

    நாளை மாலை இறுதிச்சடங்கு

    விஜயகாந்தின் இறுதி மரியாதை நாளை (29-12-2023) மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் 15 நாட்களுக்கு கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 28 Dec 2023 2:46 PM IST

    கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். 

  • 28 Dec 2023 2:43 PM IST

    தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அலை அலையாய் குவிந்து வருகின்றனர். இந்தநிலையில்,நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் கவுண்டமணி, இயக்குனர் டி.ராஜேந்தர், கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினர்.

  • 28 Dec 2023 2:41 PM IST

    எங்கள் மண்ணின் மைந்தர் மறைவு வேதனை அளிக்கிறது- பிடிஆர்

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், சிறந்த திரைக்கலைஞரும், எங்கள் மதுரை மண்ணின் மைந்தருமான விஜயகாந்த் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் - தொண்டர்களுக்கும் – இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்

    - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • கேப்டனுக்கு மரியாதை செலுத்திய காவலர்கள்...!
    28 Dec 2023 2:29 PM IST

    கேப்டனுக்கு மரியாதை செலுத்திய காவலர்கள்...!

    விருகம்பாக்கம் வழியாக விஜயகாந்த் உடலை கொண்டு செல்லும் போது துப்பாக்கி ஏந்தி சல்யூட் அடித்து காவலர்கள் மரியாதை செலுத்தினர்.

  • 28 Dec 2023 2:23 PM IST

    ஆரூயிர் நண்பர் விஜயகாந்தின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க, ஷூட்டிங்கை பாதியில் நிறுத்தி சென்னை புறப்பட்டார் ரஜினிகாந்த்.

  • 28 Dec 2023 1:50 PM IST

    விஜயகாந்த் உடல், சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. விஜயகாந்த் உடலை ஏற்றி வந்த வாகனம், சுமார் 2 மணி நேரம் மக்கள் வெள்ளத்தில் மெல்ல ஊர்ந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகம் வந்தடைந்தது. வழிநெடுக சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

    கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவருகின்றனர். 


Next Story