பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுங்கள்..! இன்று உலக எய்ட்ஸ் தினம்


பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுங்கள்..! இன்று உலக எய்ட்ஸ் தினம்
x

உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலாக இருக்கும் எய்ட்ஸ் நோயை 2030க்குள் முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. இலக்கு நிர்ணயித்துள்ளது.

எய்ட்ஸ் என்ற பெயரைக் கேட்டாலே நம்மை அறியாமல் அச்சம் சூழ்ந்துகொள்கிறது. எச்.ஐ.வி. எனும் வைரசால் உருவாகும் இந்த நோயை குணப்படுத்துவதற்கு மருந்து, மாத்திரைகள் எதுவும் இல்லையென்பதால் இந்நோய் பாதிப்பு வந்தவுடனே பலரின் மனநிலை மிகவும் மோசமடைகிறது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்தாலே நம்மையும் பாதித்து விடுமோ? என்ற சந்தேகம் எழுகிறது. இது உண்மையல்ல என்றாலும் மக்களிடையே உள்ள பயம் மட்டும் குறையவில்லை.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் இறந்துள்ளனர். இந்த நோயை தடுக்கவும், குணப்படுத்தவும் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில், 92 லட்சம் மக்கள் அவர்களுக்குத் தேவையான எச்.ஐ.வி. சிகிச்சை பெறாமல் உள்ளனர். பலருக்கு தங்களின் நிலை குறித்து தெரியவில்லை. எச்.ஐ.வி. தொடர்பான பாதிப்புகளால் ஒவ்வொரு நாளும் 1,700 உயிர்கள் பறிபோகின்றன. 3,500 பேர் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, எய்ட்ஸ் பாதிப்பு மற்றும் அதனை தடுக்கும் முறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் நோக்கம். எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகள் மற்றும் உரிமைகளை மதிப்பதற்கு மக்களை பழக்குவது இந்த நாளின் முக்கிய குறிக்கோள் ஆகும்

உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலாக இருக்கும் எய்ட்ஸ் நோயை 2030க்குள் முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு, நம்முன் உள்ள சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இன்றுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிந்திக்கவும் இது முக்கியமான நாள்.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளுடன் எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் 'சமூகங்களின் சாதனைகளைக் கொண்டாடுவதை விட, சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்' என்பதாகும். அதாவது சமூகம் வழிநடத்தட்டும் என்பதே இந்த ஆண்டின் மையக்கருத்து.

இந்த நாளில் எய்ட்ஸ் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசு சார்பில் கவுகாத்தியில் சுகாதாரத்துறை இணை மந்திரி பாகெல் சிங் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நாளில் எய்ட்ஸ் நோய்க்கு இரையானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், எச்ஐவி/எய்ட்ஸ் நோயை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவை வழங்குவோம், எச்.ஐ.வி/எய்ட்ஸ்க்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபடுவோம்!


Next Story