பேனா மன்னன் பதில் சொல்கிறார்
கேள்வி: எலிகளுக்கு கஞ்சா பிடிக்குமா? (ராமு, செம்பட்டி)
பதில்: போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த கஞ்சாவையே எலிகள் சாப்பிட்டது என்று போலீஸ்காரர்கள் சொல்கிறார்களே. 'போதை எலி' களாக இருக்குமோ?
*****
கேள்வி: நான் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன். எப்போது திருமணம் செய்து கொள்ளலாம்? (ஆர்.ராமலிங்கம், அருப்புக்கோட்டை)
பதில்: உங்களுக்கு 21 வயதுக்கு மேலும், உங்கள் காதலிக்கு 18 வயதுக்கு மேலும் இருந்து குடும்பம் நடத்துவதற்கும் சொந்த காலில் நிற்கவும் வருமானம் இருந்தால் கெட்டி மேளத்தை கொட்டி விடுங்கள்.
*****
கேள்வி: அரசியலை பலரும் சாக்கடை என்கிறார்களே, ஏன்? (கார்த்திகா ராஜேஷ், திருச்சி)
பதில்: யானைகள் புரண்டால் குற்றாலம். எருமைகள் புரண்டால் குட்டை.
*****
கேள்வி: ஜெயலலிதாவை பற்றி உண்மையைத்தான் கூறினேன், என்கிறாரே அண்ணாமலை? (மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்)
பதில்: அண்ணாமலை வழி தனி வழி. எதுவும் அவரை கட்டுப்படுத்தாது.
*****
கேள்வி: மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருபவரிடம் காணொலி மூலம் விசாரிப்பது உடல் நலனுக்கு உகந்ததா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
பதில்: நேரில் வரமுடியாத நிலையில் காணொலி மூலம் தானே விசாரிக்க முடியும்.
*****
கேள்வி: அன்பு, காதல், பாசம் - மூன்றுக்கும் என்ன வேறுபாடு? (அ.முரளிதரன், மதுரை)
பதில்: அன்பு என்பது தெரியாதவரிடம் வைப்பது. பாசம் என்பது தெரிந்தவரிடம் வைப்பது. காதல் என்பது ஒரே ஒருவரிடம் மட்டுமே வைக்கக்கூடியது.
*****
கேள்வி: நடிகர் விஜய் நடிப்பதை தற்போது நிறுத்திவிட்டு, முழுநேர அரசியலில் களம் இறங்கிவிட்டாராமே? (வே.அழகர், ஒக்கூர் புதூர்)
பதில்: அரசியலில் கால் வைக்க தயாராகி விட்டார். எப்போது என்பதை காலமும், அவரும் தான் சொல்லவேண்டும்.
*****
கேள்வி: சில குடும்ப பெண்மணிகள் தங்களது பேரக்குழந்தைகளை வளர்ப்பதற்கும், கவனிப்பதற்கும் வேலைக்கார பெண்களை நியமனம் செய்கிறார்களே... (டி.கே.மோகன், விருகம்பாக்கம், சென்னை)
பதில்: பாவம் அவர்கள். பேரக்குழந்தைகளை கொஞ்சுவதில், வளர்ப்பதில், கவனிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. அது அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.
*****
கேள்வி: மனைவியிடம், கணவன் நாடகமாடுவது ஏற்புடையது தானா? (ஆர்.ரெங்கசாமி, வடுகப்பட்டி)
பதில்: மனைவியிடம் கணவனும், கணவனிடம் மனைவியும் உண்மையான அன்பு கொண்டிருந்தால் நாடகத்துக்கே இடம் இல்லை. அப்படி இருந்தால் உண்மையான அன்பு இல்லை என்றுதான் பொருள்.
*****
கேள்வி: கோர்ட்டில் நீதிபதி அளிக்கும் தீர்ப்புக்கும், பட்டிமன்றத்தில் நடுவர் அளிக்கும் தீர்ப்புக்கும் என்ன வித்தியாசம்? (குலசை நஜிமுதீன், மாம்பாக்கம், சென்னை)
பதில்: இரண்டுமே தீர்ப்பு தான். நீதிபதி அளிக்கும் தீர்ப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உண்டு. பட்டிமன்ற நடுவர் அளிக்கும் தீர்ப்புக்கு மனதில் அங்கீகாரம் உண்டு.
*****
கேள்வி: நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனரே? (ரவிக்குமார், தேனி)
பதில்: தமிழக மாணவர்கள் எதிலும் வல்லவர்கள் என்று சாதித்துக் காட்டிவிட்டார்கள். எந்த தடையையும் தாண்டுவார்கள்.
*****
கேள்வி: பா.ஜ.க.வுக்கு எதிரான ஊழல்வாதிகளின் கூட்டணி, சீட்டுக்கட்டு போல சரியும் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் சாடியுள்ளாரே... (சுரேஷ், நெல்லை)
பதில்: சீட்டு கட்டு போல சரியுமா, செங்கற்கள் போல கட்டிடமாக கட்டப்படுமா? என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும்.
*****
கேள்வி: பிடிவாதம், விதண்டா வாதம். இதில் எது கொடுமையானது? (என்.செ.கே.செல்வகுமார், மேற்பனைக்காடு கிழக்கு)
பதில்: பிடிவாதத்தால் விளைவது தானே விதண்டா வாதம்.
*****
கேள்வி: இளைஞர் சமுதாயத்துக்கு வேட்டி கட்டுவதில் ஒரு ஆசை வந்துள்ளதே? (எஸ்.வரதராஜன், சேலம்)
பதில்: அவர்கள் என்னதான் நவநாகரிக ஆடைகள் அணிந்தாலும், வேட்டி அணியும்போது ஒரு கம்பீரம் இருக்கிறது. 'மாப்பிள்ளை ஜோர்' வந்துவிடுகிறது அல்லவா?
*****
கேள்வி: கோவையில் முதல் பெண் பஸ் டிரைவருக்கு காரை பரிசளித்திருக்கிறாரே கமல்ஹாசன்? (கே.கே.பாலசுப்ரமணியன், கோவை புதூர்)
பதில்: வெறும் அறிக்கை யோடு நின்று விடாமல் அந்த பெண்ணுக்கு கார் தருகிறேன் என்று சொன்ன கமல்ஹாசன் பாராட்டுக்குரியவர்.
*****
கேள்வி: மனசுக்கு பிடித்த மகாராணி மனைவியான பின்பு மங்கம்மாவாக மாறிவிடும் ரகசியம் என்ன? (ஜா.ஸ்டீபன்ராஜ், புதுக்கோட்டை)
பதில்: அது அவரை மணந்த மகாராஜாவின் நடத்தையில் தான் இருக்கிறது.
*****
கேள்வி: காமராஜரைப் போல இன்னொரு தலைவர் நமக்கு கிடைப்பாரா? (கா.சு.மணி, திருப்பூர்)
பதில்: கிடைத்தால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே நல்லது. ஒப்பற்ற தலைவரல்லவா அவர்.
*****
கேள்வி: நீதித்துறை-காவல்துறை. வித்தியாசம் என்ன? (டி.என்.ராமு, தேங்காமரத்துப்பட்டி)
பதில்: குற்றங்களை கண்டுபிடிப்பது காவல்துறை. தீர விசாரித்து நீதி வழங்குவது நீதித்துறை.