பேனா மன்னன் பதில் சொல்கிறார்


பேனா மன்னன் பதில் சொல்கிறார்
x

அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பேனா மன்னன், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை-600007. வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: penamannan@dt.co.in

கேள்வி: அரசியல்வாதிகளிடம் உள்ள பலம் எது? பலவீனம் எது? (ஆர்.ரங்கசாமி, வடுகப்பட்டி, தேனி)

பதில்: பலம் அவர்களின் மக்கள் பணி. பலவீனம் அவர்களின் ஊழல்.

--------

கேள்வி: அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா? என்று எதை கூறுவீர்கள்? (த.சத்தியநாராயணன், அயனாவரம்)



பதில்: அண்ணாமலைக்கும், அ.தி.மு.க.வுக்கும் ஏற்பட்டுள்ள மோதலைத்தான்.

----------------

கேள்வி: சுறுசுறுப்பாக இயங்கும் மனிதர்களை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பது சோம்பேறிகளாக்கி விட்டது அல்லவா... (பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118)

பதில்: உண்மை தான்.

----------------

கேள்வி: புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பப்பெறுவது பற்றி... (ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி)

பதில்: அடிக்கடி புழக்கத்தை மாற்றினால் நிரந்தர குழப்பத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.

----------------

கேள்வி: தமிழ்நாட்டில் நடிகர் என்ற வரிசையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இவர்கள் தவிர வேறு யாரும்ஆட்சியை பிடித்தது உண்டா? (என்.ஆசைப்பாண்டி, நெல்லூர், திண்டுக்கல்)




பதில்: மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகி அம்மாள், தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் சினிமாவில் நடித்து இருக்கிறார்கள் என்பதை மறந்து விட்டீர்களா?

----------------

கேள்வி: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த பிரபஞ்சன் பற்றி... (எச்.மோகன், திருவாரூர்)

பதில்: சலியாத உழைப்பு இருந்தால் சிகரம் என்பது தொட்டுவிடும் தூரம் தான் என்று நிரூபித்த மாணவ சிங்கம்.

------------------------

கேள்வி: கஷ்டப்படும் பிறரை கண்டு கைகொடுத்து உதவி செய்யாவிட்டாலும், நக்கலாக சிரித்து கேலி செய்யும் சில ஜென்மங்களை என்ன செய்வது? (சங்கீத சரவணன், மயிலாடுதுறை)

பதில்: நீங்களே அவர்கள் யாரென்று சரியாக சொல்லிவிட்டீர்கள்.

------------------------

கேள்வி: கடவுள் படைத்த விலங்கினங்களில் கழுதையை மட்டும் 'என்னை பார் யோகம் வரும்' என பெரியோர்கள் சொல்வதன் காரணம் என்ன? (எம்.பி.அப்துல் காதர், காயல்பட்டினம்)



பதில்: கழுதைக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதால் தான். பார்க்கும் பார்வையில் கழுதை கூட கவிதையாகலாம்.

------------------------

கேள்வி: தமிழரை பிரதமர் ஆக்குமா பா.ஜ.க.? (மலர்விழி, ஊத்தங்கரை)



பதில்: அமித்ஷாவே தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லிவிட்டாரே! ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

------------------------

கேள்வி: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க பேனா மன்னன் அழைக்கப்பட்டால்... (ஜி.ஸ்டீபன்ராஜ், புதுக்கோட்டை)



பதில்: இப்போது பதில் சொல்வதற்கு பதிலாக கேள்விகளை பேனா மன்னன் கேட்பார்.

------------------------

கேள்வி: பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டுமா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

பதில்: ரத்து செய்தால் நல்லது தான். எத்தனை பொதுத்தேர்வுகளுக்குத்தான் மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வது?

------------------------

கேள்வி: ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று விஜய் கூறுகிறாரே ஏன்? அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகி விட்டதா? (கே.எம். ஸ்வீட் முருகன், கரடி கொல்லப்பட்டி)



பதில்: தூண்டிலை போட்டுவிட்டார். மீன் சிக்குமா? என்பது போகப்போக தெரியும்.

------------------------

கேள்வி: அரசியல் சாசனம் பா.ஜ.க.வுக்கு பகவத்கீதை, பைபிள், குர்ஆன் போன்றது என்கிறாரே நிதின் கட்காரி? (மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்)

பதில்: பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதுதான் புனித நூல்.

------------------------

கேள்வி: விருந்தும், மருந்தும் 3 நாட்கள் மட்டும் என்று பெரியவர்கள் கூறுவதன் அர்த்தம் என்ன? (ஷியாம் பாஷா, உறையூர், திருச்சி-3)

பதில்: விருந்து 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் சலிப்பு ஏற்பட்டு விடும். 3 நாட்களுக்குள் ேநாய் குணமாகி விட்டால் தான் அது சரியான மருந்து.

------------------------

கேள்வி: என் காதலர் எப்போது என் பக்கத்தில் நின்று பேசினாலும் முகத்தை பார்த்து பேசுவதில்லை. பார்வை வேறு எங்கோ போய் நிலைகுத்தி நிற்கிறதே... (சுமித்ரா, மதுரை-3)



பதில்: சேலையை நன்றாக இழுத்து மூடிக்கொண்டு பேசுங்கள். பார்வை முகத்துக்கு வந்து விடும்.

------------------------

கேள்வி: எது காலத்தின் கட்டாயம்? (மனோ மணாளன், நரசிம்மநாயக்கன் பாளையம், கோவை-31)

பதில்: பிறந்தவரெல்லாம் இறப்பது காலத்தின் கட்டாயம்.

------------------------

கேள்வி: சினிமாவில் நடிப்பதால் மட்டுமே நாட்டை ஆள்வதற்கான தகுதி வந்துவிட்டது என்று நினைப்பது பெரிய அவமானம் என நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளாரே? (ஜெ.மணிகண்டன், கஸ்பா-ஏ, ஆம்பூர்)



பதில்: அவரே திரை உலகத்தில் இருந்து வந்தவர் தானே...


Next Story