அணுசக்தியின் தந்தை..!


அணுசக்தியின் தந்தை..!
x

அணுசக்தி என்பது கூரான கத்தி போன்றது. அதைக் கொண்டு ஆக்கப்பூர்வமான காரியங்களையும் செய்யலாம்; அலட்சியமாக உலகை அழிக்கவும் செய்யலாம். எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது. அந்தக் கூரான கத்தியை வார்த்து தந்தவர்களில் முக்கியமானவர் இத்தாலியைச் சேர்ந்த அணு விஞ்ஞானி என்ரிக்கோ பெர்மி (Enrico Fermi). அணுவியலின் தந்தை ரூதர்போர்டு என்றால், அணுகுண்டு தொழில்நுட்பத்தின் தந்தை இவர்.

1901-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி இத்தாலியின் ரோம் நகரில் பிறந்தார் பெர்மி. கணித வல்லமையும், ஆய்வு சிந்தனையும் அமையப் பெற்ற இவர், பைசா பல்கலைக்கழகத்திலும், ஐரோப்பாவின் வேறு பல இடங்களிலும் இயற்பியல் பயின்று, ரோம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.

பெர்மி ஓர் யூதப் பெண்ணைக் காதலித்து மணந்தார். அக்கால ஐரோப்பாவில் யூதர்களுக்கு எதிரான மதச் சீண்டல்கள் கிளம்பியதால், அவர் அமெரிக்காவில் குடிபுக நேர்ந்தது. அங்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆசிரியராக சேர்ந்தார். ஏற்கனவே அவர் தொடங்கி நடத்திக் கொண்டிருந்த யுரேனிய நியூட்ரான் அணுக்கரு இயக்கம் குறித்த ஆய்வுகள் அந்த சமயத்தில் பிரபலமடைய... அமெரிக்காவின் மிக முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரானார் பெர்மி.

எதிர்ப்புக்காகவோ, ஆதரவுக்காகவோ... இன்று நாம் அணு உலை பற்றி அதிகம் பேசுகிறோம். இன்றே அது இத்தனை ஆபத்தாகக் கருதப்படுகிறதென்றால் முதன்முதலில் நிறுவப்படும்போது எப்படி இருந்திருக்கும்? உலகின் முதல் அணு உலையான 'சிகாகோ பைல் 1' சிகாகோ பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே வெற்றிகரமாக இயக்கிக் காட்டப்பட்டதென்றால், அதன் பின்னால் இருந்த திறமை பெர்மியினுடையது.

அணுவின் இத்தனை அளப்பரிய சக்தியை ஓர் ஆயுதமாக்க முடியுமா? இன்று இது வில்லத்தனமான கேள்வியாக இருக்கலாம். ஆனால், அன்று இது புத்தம் புதிய அறிவியல் சவால். அதையும் ஏற்றார் பெர்மி. இவரது அயராத முயற்சியால்தான் அமெரிக்க ராணுவம் உலகின் முதல் அணுகுண்டு சோதனையை 1945 ஜூலை 16-ந் தேதி வெற்றிகரமாக நடத்தியது.

'டிரினிட்டி' என்று பெயரிடப்பட்ட இந்தச் சோதனை, நியூ மெக்ஸிகோ அருகேயுள்ள மூர்டோ பாலைவனத்தில் நிகழ்த்தப்பட்டபோது 20 கிலோ டன் அளவிலான சக்தியை வெளிப்படுத்தியது. இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது அணுகுண்டுதான்!

அணு சக்தி மூலம் ஆக்கத்துக்கும், அழிவுக்கும் காரணகர்த்தாவாக அமைந்த பெர்மி, 1954-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி தனது 53-வது வயதில் புற்றுநோய் அரக்கனிடம் சிக்கி காலமானார்.

இவரது நினைவாக 1952-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை தனிமம் ஒன்றுக்கு 'பெர்மியம்' எனப் பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்கா இவரது பெயரில் என்ரிக்கோ பெர்மி விருதையும் வழங்கி வருகிறது. ஆனால், அணு ஆயுதம் பயன்படுத்தாத அமைதி எண்ணம்தான் இவருக்கான உண்மை அஞ்சலியாக இருக்க முடியும்..!


Next Story