கலாசாரத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விளையாட்டுகள்
சைக்கிள் போட்டி, உறியடி, கயிறு இழுத்தல், கபடி, ஜல்லிக்கட்டு என ஒவ்வொரு விளையாட்டும் விறுவிறுப்பானதாக இருக்கும்.
விளையாட்டு என்பது உடலை மட்டும் அல்ல மனதையும் ஆரோக்கியமாக வைப்பதுடன், புத்துணர்ச்சி அடைய செய்யும். தமிழனின் பாரம்பரிய விளையாட்டுகள் மூலம், கூடி விளையாடவேண்டும் என்ற செய்தியை நமது முன்னோர்கள் வகுத்து சென்றுள்ளனர். கிராமங்களில் இன்றும் திருவிழாக்களின்போது இளைஞர்கள் கூடி விளையாடுவதை காணலாம்.
குறிப்பாக, பொங்கல் விழாவின்போது கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சுவாரஸ்யமான பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
சிறுவர்களுக்கு ஓட்டப் பந்தயம், கயிற்றில் தொங்கும் தின்பண்டங்களை வாயால் கவ்வி பிடித்தல், லெமன் மற்றும் ஸ்பூன், சாக்குப் போட்டி, மியூசிக் சேர் போன்றவை இருக்கும்.
இளம்பெண்களுக்கு மியூசிக் சேர், கயிறு இழுத்தல், தண்ணீர் குடம் சுமத்தல், கோலப்போட்டிகள் நடைபெறும். பாண்டி, பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டையும் விளையாடி மகிழ்கின்றனர். இளைஞர்களுக்கு சைக்கிள் போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டும்போட்டி, உறியடி, கயிறு இழுத்தல், கபடி, ஜல்லிக்கட்டு என ஒவ்வொரு விளையாட்டும் விறுவிறுப்பானதாக இருக்கும்.
இதுதவிர ஒரு சில பகுதிகளில் பொங்கல் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மயிலாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்கின்றனர்.