பழமையும், பாரம்பரியமும் கொண்ட வெலிங்டன் 'ஜிம்கானா' கிளப்


பழமையும், பாரம்பரியமும் கொண்ட வெலிங்டன் ஜிம்கானா கிளப்
x

"ராமம்மா ஹே ராமம்மா

ஜாலி ஓ ஜிம்கானா

ராசம்மா ஹே ராசம்மா

கேக்குதா என் கானா..."

இது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் வரிகள்.

அது சரி...அதென்ன ஜாலி ஓ ஜிம்கானா?.

ஜாலி என்பது மகிழ்ச்சியை குறிக்கிறது.

அப்படி என்றால் ஜிம்கானா என்பது?

ஜிம்கானா என்பது மகிழ்ச்சியாக இருக்கும் இடத்தை குறிக்கிறது.

ஆம்...அது உடலுக்கு புத்துணர்ச்சியையும், உள்ளத்துக்கு மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடிய இடமாக அறியப்படுகிறது. அவை ஜிம்கானா கிளப்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வியப்பூட்டும் வரலாறு

இந்தியாவில் ஏராளமான ஜிம்கானா கிளப்கள் உள்ளன. அதில் பழமை வாய்ந்ததும், பாரம்பரியம் மிக்கதுமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள வெலிங்டன் ஜிம்கானா கிளப் திகழ்கிறது. அதன் வியப்பூட்டும் வரலாற்றை அறிந்து கொள்ள சற்று பின்னோக்கி ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக்கு நகர வேண்டும்.

கி.பி. 1819-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லீவன், நீலகிரியை நிர்மாணிக்க தொடங்கினார். அங்குள்ள ஊட்டி, கூடலுர், குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் கட்டுமானங்களை ஏற்படுத்தினார்.

அதில் ஓரிடத்தில் ராணுவ மையத்தை நிறுவ ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. அதற்கு முதலில் தேர்வான இடம், ஊட்டி. ஆனால் அங்கு நிலவிய காலநிலை, ராணுவ மையத்தை நிறுவ ஒத்துழைக்கவில்லை. அதன்பிறகு ஆங்கிலேய அரசின் பார்வை குன்னூர் பக்கம் திரும்பியது.

ராணுவ மையம்

"பசுமையான மழைக்காடுகள்

பதற வைக்கும் பள்ளத்தாக்குகள்

பனி மூடிய மலைக்குன்றுகள்

பயமுறுத்தும் காட்டு விலங்குகள்..."

இதுதான் ஆரம்ப கால குன்னூரின் அச்சமூட்டும் சிறப்பம்சங்களாக இருந்தது.

இன்று செழிப்புடன் காணப்படும் அந்த நகரத்தின் பொலிவான தோற்றம், அன்று அடர் காடுகளால் இருள் சூழ கிடந்தது.

அந்த இடத்தை அழகுற செதுக்கி ராணுவ மையத்தை நிறுவ ஆசைப்பட்டனர், ஆங்கிலேயர்கள். அவர்களது இச்சை வெற்றி பெறும் வகையில், அங்கு 1853-ம் ஆண்டு 1,700 ஏக்கரில் ராணுவ மையம் நிறுவப்பட்டது. இதுவே மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் என்று அழைக்கப்படுகிறது.

அதற்கு வித்திட்டவர், சென்னை மாகாண கவர்னராக இருந்த ட்வீடேலின் மார்க்விஸ்.

சிகிச்சையும், புத்துணர்ச்சியும்...

அந்த ராணுவ மையம் அமைந்த இடத்துக்கு வெலிங்டன் என்று பெயரிடப்பட்டது. அங்கு தங்குமிடம், உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

மேலும் வெலிங்டனில் பணியாற்றிய வீரர்களுக்கு ஆயுதங்களை கையாளுதல், குதிரையேற்றம், வாள் வீச்சு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவர்கள் போரில் பங்கேற்க வெளியிடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதில் காயம் அடைந்து வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி புத்துணர்ச்சியும் அளிக்க ஆங்கிலேய அரசு ஆலோசித்தது. அதன் மூலம் அவர்கள் மீண்டும் ஆர்வத்துடன் போரில் பங்கு பெறுவார்கள் என்று நம்பியது.

கிரிக்கெட் மைதானம்

அந்த வகையில்தான் 1873-ம் ஆண்டு வெலிங்டனில் 'கிளப்' என்ற மனமகிழ் மன்றம் தொடங்கப்பட்டது. இது 60 ஏக்கர் பரப்பளவில் குதிரையேற்றம், கிரிக்கெட், கோல்ப், போலோ, ரக்பி விளையாட்டு மைதானங்கள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைய பெற்றது. அந்த கிளப்பின் உறுப்பினர்களாக, ராணுவ வீரர்களே இருந்தனர்.

போர்களாலும், பயிற்சிகளாலும் களைப்பில் இருந்த அவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட அந்த கிளப் வரப்பிரசாதமாக அமைந்தது.

அங்கு அவர்கள் போர்க்களத்தின் மரண ஓலத்தை கேட்காமலும், ரத்த வாடையை நுகராமலும் தற்காலிக ஆனந்தத்தை தடையின்றி பெற முடிந்தது.

அத்தகைய ஓய்வுக்கு பிறகு போர்க்களம் புகுந்த வீரர்கள், ஆங்கிலேய அரசின் நம்பிக்கைக்கு ஏற்ப தளராத வீரத்துடன் போரிட்டனர். இது ஆங்கிலேய அரசுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

தனியாருக்கு குத்தகை

அந்த சமயத்தில் நீண்ட தொலைவுகளிலும் போர்கள் நடைபெற்றதால், அங்கு வீரர்களை அனுப்பிவிட்டு, திரும்ப அழைத்து வருவதில் சிரமம் இருந்தது. இதன் காரணமாக அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டதால், வெலிங்டனில் வீரர்களின் எண்ணிக்கை குறைந்து போனது. அந்த வகையில் கிளப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் சரிந்தது.

இதன் விளைவாக 1916-ம் ஆண்டு அந்த கிளப் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அங்கு அதுவரை ராணுவ வீரர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். அதன்பிறகு தொழில் அதிபர்கள் உள்ளிட்ட வெளிநபர்களும் உறுப்பினர்களாக சேர்த்து கொள்ளப்பட்டனர்.

கூடுதல் அம்சங்கள்



இதையடுத்து அந்த கிளப், விரிவாக்கம் செய்யப்பட்டது. அதோடு 'வெலிங்டன் ஜிம்கானா கிளப்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் சின்னமாக தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு கூடுதல் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டு வரப்பட்டன.

டென்னிஸ், பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் உள்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு அரங்கம் ஏற்படுத்தப்பட்டது. உயர் தர உணவுக்கூடம், ஆடம்பர விடுதி, அதிநவீன உடற்பயிற்சி கூடம், பிரமாண்ட நிகழ்ச்சி அரங்கு, உயர் ரக மது பார், நீச்சல் குளம் போன்ற அம்சங்களும் கொண்டு வரப்பட்டது. மேலும் படகு சவாரியும் ஏற்படுத்தப்பட்டது.

முதல் இந்திய உறுப்பினர்

இங்குள்ள சொகுசு வாழ்க்கையை சலுகையுடன் அனுபவிக்க அந்த கிளப்பில் உறுப்பினராக இணைவது அவசியம். இல்லையென்றால், கட்டணம் இருமடங்காகும். இதன் காரணமாக அந்த கிளப்பில் சேர கடும் போட்டி நிலவியதும். மேலும் அது ஒரு கவுரவமாக கருதப்பட்டது.

அந்த கிளப்பின் முதல் இந்திய உறுப்பினராக கர்னல் ராஜ்குமார் தேவ்ராஜ் உர்ஸ், கடந்த 1943-ம் ஆண்டு சேர்த்து கொள்ளப்பட்டார். அவரை தொடர்ந்து பல இந்தியர்கள் அந்த கிளப்பில் உறுப்பினராக சேர்ந்தனர்.

பயிற்சி கல்லூரி

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரியும் கொண்டு வரப்பட்டது. அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சுதந்திரத்துக்கு பிறகு அந்த ராணுவ பகுதி, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அங்கு ராணுவ வீரர்கள் குடியிருக்கும் பகுதியை நிர்வகிக்க கன்டோன்மெண்ட் போர்டு உருவாக்கப்பட்டது. அங்குள்ள நிலங்களை டி.இ.ஓ. என்று அழைக்கப்படும் பொது பாதுகாப்பு தோட்டங்கள் இயக்குனரகத்தின் இந்திய பாதுகாப்பு எஸ்டேட் சேவை குழு பாதுகாக்கிறது.

அதில் ஜிம்கானா கிளப் அமைந்துள்ள நிலப்பகுதியும் அடங்கும். ஆனால் குத்தகைக்கு எடுத்து இருந்ததால், அந்த கிளப் தனியார் மூலம் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

குதிரை சாகசம்

இங்குள்ள மைதானத்தில் ராணுவ வீரர்களுக்கு குதிரையேற்ற பயிற்சி, ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் வாரம் நடத்தப்படும். அதில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் குதிரையேற்ற சாகசத்தில் ஈடுபடுவார்கள்.

மேலும் குதிரை பந்தயம், ஆசர்லே, போர் ஜம்பிங், ஷோ ஜம்பிங்க், டிரிக் ஜம்பிங், பால் அண்டு பக்கெட் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்படும். இது தவிர நெருப்பு வளையத்துக்குள்ளும், வாகனத்தின் மீதும் குதிரைகள் பாய்ந்து கடந்து செல்வது பார்வையாளர்களை கவரும். அதிலும் சிறப்பாக குதிரையில் இருந்தே ஈட்டி எறியும் போட்டிகளும் நடத்தப்படும். இதில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கேடயம் வழங்கப்படும்.

அங்கு சினிமா படப்பிடிப்புகளும் நடைபெற்று உள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா, சத்யராஜ் நடித்த உடன் பிறப்பு உள்ளிட்ட படங்களின் பாடல் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு உள்ளது.

கிளப் உறுப்பினர்கள்

இந்த கிளப்பில் ராணுவ உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள், பல்வேறு அரசு துறை உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உறுப்பினர்களாக தொடர்கின்றனர். மேலும் பலர், உறுப்பினராக சேர ஆவல் கொண்டு காத்திருக்கின்றனர்.

இதன் காரணமாகவே அந்த கிளப் புகழ் பெற்று விளங்குகிறது. தற்போது 6 ஆயிரத்து 700 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 77 சதவீதம் பேர் ராணுவத்தினர், 23 சதவீதம் பேர் வெளி நபர்கள்.

நீலகிரியை சேர்ந்தவர்கள் கிளப்பில் உறுப்பினராக சேர ரூ.3 லட்சமும், மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் கிளப்பில் உறுப்பினராக சேர ரூ.12½ லட்சமும் செலுத்த வேண்டும். ஆனால் வெளிநாட்டவருக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

உறுப்பினர்களாக இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லலாம். ஆனால் அவர்களுடன் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. வேண்டுமென்றால், முன்பதிவு செய்து அதற்கு உரிய கட்டணத்தை செலுத்திவிட்டு சென்று வரலாம். 150 ஆண்டுகளை கடந்து பழமை வாய்ந்ததாக இருந்தாலும், புதுப்புது உறுப்பினர்களால் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருவதால், இன்று வரை தன் புகழை இழக்காமல் மிளிர்கிறது, அந்த ஜிம்கானா கிளப். இதுதான், தன்னிடம் உறுப்பினராக சேர பலரை ஏங்க வைக்கும் அந்த கிளப்பின் ரகசியமோ என்னவோ...!

இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல்



வெலிங்டன் ஜிம்கானா கிளப்பில் உயர் ராணுவ அதிகாரிகள் பலர் உறுப்பினர்களாக இருந்த போதிலும், இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷா உறுப்பினராக இருந்தது, தற்போதும் பெருமையாக பேசப்படுகிறது. மேலும் அவர், அந்த கிளப்பின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரை சாம் மானெக் ஷா முன்னின்று நடத்தினார். அதில் வெற்றியும் பெற்று, வங்கதேசம் தனி நாடாக அறிவிக்கப்பட முக்கிய காரணமாக இருந்தார்.

அதற்கு முன்பாக சாம் மானெக் ஷாவிடம், போருக்கு தயாரா? என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கேள்வி எழுப்பினார். அதற்கு, நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று அவர் அளித்த பதில் என்றும் நினைவுக்கூரத்தக்கது.

ராணுவ வீரர்களால் சாம் பதூர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட சாம் மானெக் ஷா, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்தவர். அவர் ஓய்வு பெற்ற பிறகு வெலிங்டனில் தங்கியிருந்தார். நுரையீரல் பிரச்சினையால் அவதிப்பட்ட சாம் மானெக் ஷா, தனது 94 வயதில் காலமானார். பின்னர் அவரது உடல், ஊட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவாக ஊட்டி-குன்னூர் சாலையில் வெலிங்டனில் உள்ள பாலத்துக்கு சாம் மானெக் ஷா பெயர் சூட்டப்பட்டது. மேலும் அங்கு அவரது உருவச்சிலையும் நிறுவப்பட்டு உள்ளது.

கிளப்பில் உள்ள சிக்கல் என்ன?

வெலிங்டனில் உள்ள ஜிம்கானா கிளப், கடந்த 3-ந் தேதி பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு 5-ந் தேதி திடீரென சீல் அகற்றப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்குள்ள சிக்கல் என்ன என்பது குறித்து வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகத்தினர் கூறும்போது, குத்தகைக்கு வாங்கிய இடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்தினால் மட்டுமே மீண்டும் குத்தகைக்கு வழங்க ஆலோசனை செய்யப்படும். விதிமுறைகளை மீறினால் குத்தகை ரத்து செய்யப்பட்டு விடும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜிம்கானா கிளப் உள்ள இடத்தில் சுமார் 30 சதவீதம் மட்டுமே விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிடங்கள் உள்ளது. 70 சதவீதம் விதிமுறைகளை மீறிய கட்டிடங்கள் உள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட சீல் வைப்பு நடவடிக்கை, கன்டோன்மெண்ட் சட்டத்திற்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டது என்றனர்.

ஜிம்கானா கிளப் நிர்வாகத்தினர் கூறும்போது, இந்த கிளப்பின் குத்தகை காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்தது. இது தொடர்பாக ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்கு உள்ளது. டிசம்பர் மாதம் வரை கிளப் செயல்பட கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

ஐகோர்ட்டு அறிவுறுத்தலின்பேரிலும், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரிலும் சீல் அகற்றப்பட்டு உள்ளது. தற்போது உறுப்பினர்கள் வழக்கம்போல் கிளப்புக்கு வந்து செல்கின்றனர் என்றனர்.

ஜிம்கானா ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்க முயன்ற பிபின் ராவத்



வெலிங்டன் ஜிம்கானா கிளப்பில் ஹெலிகாப்டர் தளமும் உள்ளது. இங்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் தரையிறக்கப்படும். ராணுவ மையம் மற்றும் கல்லூரிக்கு வரும் உயர் ராணுவ அதிகாரிகள், ஹெலிகாப்டரில் ஜிம்கானா கிளப்பிற்கு வந்து, அங்கிருந்துதான் மேற்கண்ட இடங்களுக்கு செல்வார்கள். இங்கு ராணுவ அதிகாரிகள் மட்டுமின்றி பிரதமர்கள், ஜனாதிபதிகள், கவர்னர்கள், மத்திய மந்திரிகள் ஹெலிகாப்டரில் வந்திறங்கி உள்ளனர்.

எனினும் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் ஜிம்கானா தளத்துக்கு ஹெலிகாப்டரில் தரையிறங்க இருந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்தது ஆறாத வடுவாக பதிந்துள்ளது.

கன்டோன்மெண்ட் என்றால் என்ன?

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் 62 கன்டோன்மெண்ட் போர்டுகள் உள்ளன. அதில் ஒன்றுதான், வெலிங்டன் கன்டோன்மெண்ட் போர்டு.

ராணுவ வீரர்கள் குடியிருப்பு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள், கன்டோன்மெண்ட் என்று அழைக்கப்படுகிறது. அந்த பகுதியை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட அமைப்பு, கன்டோன்மெண்ட் போர்டு ஆகும்.

இந்த போர்டு தலைவராக, ராணுவ அதிகாரி செயல்படுவார். இது தவிர அங்கு வசிக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 உறுப்பினர்கள் செயல்படுவார்கள். அதில் ஒருவர் துணைத்தலைவராக செயல்படுவார். தற்போது வெலிங்டன் கன்டோன்மெண்ட் போர்டு தலைவராக ராணுவ மையத்தின் கமாண்டண்ட் பிரிகேடியர் எஸ்.கே.யாதவ் உள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,949 வீடுகள் கொண்ட வெலிங்டனில் 19 ஆயிரத்து 462 பேர் வசித்து வந்தனர்.

இதில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 789 ஆகவும், பொதுமக்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 867 ஆகவும் இருந்தது.


Next Story