என்.எல்.சி. விரிவாக்கம் விவசாயிகள் ஏக்கம்
நமது நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் 75 சதவீத மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலமே கிடைக்கிறது. அதற்காக ஆண்டுக்கு சராசரியாக 892 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. அவற்றில் 220 மில்லியன் டன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள 672 மில்லியன் டன், நமது நாட்டில் வெட்டி எடுக்கப்படுகிறது.
அதில் முக்கிய பங்கு கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான 'என்.எல்.சி. இந்தியா' நிறுவனத்துக்கு உண்டு.
பழுப்பு நிலக்கரியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதே இதன் பிரதான பணி. நிலக்கரி வெட்டி எடுக்க நெய்வேலியில் 3 திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ளன. மின்சார உற்பத்திக்கு 4 அனல் மின்நிலையங்களும் இருக்கின்றன.
நல்ல லாபத்தில் இயங்கிவந்த இந்த நிறுவனம் தற்போது மின் உற்பத்தி, நிலக்கரி வெட்டி எடுப்பு போன்ற பணிகளில் சரிவைச் சந்தித்துக் கொண்டு வருகிறது. இந்தச் சரிவுக்கு நிலக்கரி தட்டுப்பாடுதான் காரணமாகும்.
அதனால், அந்த நிறுவனம் 2-வது நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணியை மேற்கொண்டு நிலக்கரி வெட்டி எடுக்கும் அளவை உயர்த்துவதன் மூலம் மின்சார உற்பத்தியையும் அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது.
என்.எல்.சி. எத்தனையோ விரிவாக்க பணிகளை சத்தமே இல்லாமல் செய்து இருக்கிறது. ஆனால் அதற்கு எல்லாம் சந்தித்திராத எதிர்ப்பை இப்போது சந்தித்து வருகிறது.
எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும் அந்த நிறுவனம், எதிர்கால திட்டமிடலுடன்தான் பயணித்துக் கொண்டு வருகிறது.
அதில் ஒன்றுதான் 2-வது சுரங்கத்தின் விரிவாக்கம். இந்தச் சுரங்கத்தை ஒட்டியுள்ள கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், கரைமேடு, கீழ் வளையமாதேவி கிராமங்களில்தான் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.
ஏற்கனவே அதற்காக இந்தப் பகுதியில் மொத்தம் 603 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அவ்வாறு நிலத்தை கையப்படுத்தினாலும், அங்கு உடனடியான என்.எல்.சி. விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவில்லை.
அதனால் விவசாயிகள் வழக்கம் போல் அந்த நிலத்தில் வேளாண்மைப் பணிகளை மேற்கொண்டு வந்தார்கள். என்.எல்.சி.யும் அதை கண்டு கொள்ளவில்லை. விவசாயம் செய்ய அவர்களுக்கு வாய்ப்புகளை விட்டுக்கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
அதே நேரம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு அந்த நிலத்தில் பயிர் சாகுபடி செய்ய வேண்டாம் என்று விவசாயிகளுக்கு, என்.எல்.சி. வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் அங்கே பயிர் செய்து வந்ததாக தெரியவருகிறது. அந்த பயிர்களை அழித்ததால்தான் தற்போது என்.எல்.சி. மீது ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பும் பாய்ந்து இருக்கிறது.
அந்த மக்களின் நிலையை அறிவதற்கு முன்பு, விரிவாக்கத்தில் சிக்கி நிலக்கரிச் சுரங்கமாக மாற இருக்கும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களின் இன்றைய நிலையை கொஞ்சம் அறிந்து கொள்வது அவசியமாகிறது.
பசுமை கொஞ்சும் பச்சை பசேல் வயல் வெளிகளுக்கு இடையே அமைந்து இருக்கும் சின்னஞ்சிறு கிராமங்கள், அவை.
முப்போகமும் நெல் விளையும் பூமி. அங்கு வாழும் மக்களுக்கு விவசாயம் மட்டுமே தெரிந்த தொழில்.
விவசாய பணிக்கு நீர் ஆதாரம், பரவனாறு. என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் இருந்து வெளியேறிவரும் தண்ணீர்தான் பரவனாறின் நீர் ஆதாரம். சுரங்கத்தை ஆறத்தழுவி பாய்ந்தோடும் பரவனாறு மும்முடி சோழகன், கரிவெட்டி, மதுவானைமேடு வழியாக வாலாஜா ஏரிக்கு வந்து, அங்கிருந்து கல்குணம், பெருமாள் ஏரி, பூவானிக்குப்பம் வழியாக ஆனைக்குப்பம் அருகே வங்க கடலில் வந்து சங்கமிக்கிறது.
என்.எல்.சி. சுரங்க நீர் பரவனாறில் வெளியேற்றப்படுவதால் வருடம் முழுவதும் ஆற்றில் நீரோட்டம் இருக்கும். ஆற்று கரைப்பகுதியில் மோட்டார்களை நிறுவி அதில் இருந்து தண்ணீரை எடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இதுதவிர வாய்க்கால் பாசனமும் உள்ளது.
பருவமழை காலங்களில் சுரங்கங்களில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படும். இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் ஆண்டுதோறும் பாதிப்புகளை சந்திப்பதும் உண்டு.
என்.எல்.சி. தனது எதிர்கால திட்டமிடலாக, கடந்த 2000-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே 2-வது சுரங்கத்தையொட்டி அமைந்துள்ள விவசாய பூமியை கையகப்படுத்தத் தொடங்கிவிட்டது.
என்.எல்.சி.யில் நிலக்கரி தட்டுப்பாடு கடந்த 2022-ம் ஆண்டு முதல் மெல்ல தலைதூக்கியது. இதை நிறுவனத்தின் தலைவரான பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளியும் உறுதிப்படுத்தி இருந்தார்.
அதாவது, என்.எல்.சி.யில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 5 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சுரங்க விரிவாக்கத்திற்கு உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இதற்கு அப்போதே எதிர்ப்புகளும் வந்தன. இருப்பினும் ஏற்கனவே என்.எல்.சி. கையகப்படுத்தி இருந்த 2-வது நிலக்கரி சுரங்க பகுதியில் தனது விரிவாக்க பணியை மெல்ல, மெல்ல மேற்கொண்டதுடன், தற்போது தீவிரப்படுத்தி உள்ளது.
அதற்கான அச்சாரமாகத்தான் பரவனாறின் வழித்தடத்தை மாற்றி அமைக்கும் பணியை என்.எல்.சி. மேற்கொண்டு இருக்கிறது. இந்த புதிய வழித்தடம், 2-வது சுரங்கத்தில் கம்மாபுரம் அருகே சிறுவரப்பூரில் இருந்து சாத்தப்பாடி, கத்தாழை, வளையமாதேவி ஏரி வழியாக, மதுவானைமேடு என்கிற இடத்தில் பழைய பரவனாறுடன் இணைக்கப்பட உள்ளது.
இதற்காக 12 கி.மீ. தூரத்துக்கு ஆற்றின் புதிய வழித்தடம் உருவாக்கப்படுகிறது. இந்த பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய போது, 10.5 கி.மீ. தூரத்துக்கு ஆறு வெட்டப்பட்டது.
வளையமாதேவி பகுதியில் 1.5 கி.மீ. தூரத்துக்கான வாய்க்கால் மட்டும் வெட்டாமல் பாக்கி இருந்த நிலையில், தற்போது அந்த பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறாக என்.எல்.சி. தனது பணியை ஏறக்குறைய முடித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது பரவனாறு வழித்தடத்தை மாற்றி அமைத்ததன் காரணமாக, கரிவெட்டி, மும்முடிசோழகன் உள்ளிட்ட 4 கிராமங்கள் தீவுகள் போல் மாறிவிட்டன.
என்.எல்.சி.க்கு அடு்த்த சவாலாக இருப்பது, கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவது. ஆனால் அதற்கும் நிர்வாகம் தன்னை தயார் படுத்திக்கொண்டு, அவர்களுக்கான மாற்று குடியிருப்புகளுடன் காத்திருக்கிறது.
தலைமுறைகள் பல கடந்து வாழ்ந்த தங்களது வீடுகள், என்.எல்.சி. சுரங்கத்துக்கு இறையாகும் என்பதை கிராம மக்களும் உணர்ந்து, அதற்கு தங்களை தயார்ப்படுத்தி வருகிறார்கள்.
"மண்ணை தோண்டுனவன் மண்ணைத்தான் தோண்டுவான். வேறு என்ன வேலை தெரியும் எங்களுக்கு?
விவசாயம் தவிர்த்து வேறு வேலை தெரியாது. வாழ்ந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்கு செல்வது என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பரவனாறு வழித்தடம் மாற்றி அமைப்பால், எங்களை ஒரு தீவில் வசிக்கும் நிலைக்கு மாற்றிவிட்டனர்.
எங்களை, மாற்று குடியிருப்பில் குடியமர்த்தினாலும் எங்களது குடும்பத்துக்கான வருவாயை, எதன் மூலம் ஈட்ட முடியும்?
இத்தனை காலம் எங்கள் தலைமுறைகளுக்கு தேவையான அரிசியை நாங்களே உற்பத்தி செய்து கொண்டோம். ஆனால், இனி எங்கள் நிலம் எங்கள் வசம் இல்லை.
பிறரை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். கடைகளில் பணம் கொடுத்து அரிசி வாங்கிச் சாப்பிட வேண்டும் என்பதை நினைக்கையில், மனம் கலங்குகிறது'' என்கிற ஏக்கத்தோடு சொல்கிறார்கள், அந்த பகுதி விவசாயிகள்.
என்.எல்.சி.க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முருகன் கூறியதாவது:-
எனது குடும்பத்தை பிரிந்து சவுதியில் கடந்த 25 ஆண்டுகள் வேலை பார்த்து, அதில் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில் 7 ஏக்கர் நிலம் (தற்போது பயிர் அழிக்கப்பட்ட இடம்) வாங்கினேன்.
40 நாட்கள் அவகாசம் தருவதாக சொன்னார்கள்
என்னிடம் இருந்து கடந்த 2009-ம் ஆண்டு 2½ ஏக்கர் நிலத்தை எடுத்தனர். அப்போது ஒரு கசோலை வழங்கினார்கள். அதற்கான பணத்தை இதுநாள் வரைக்கும் நாங்கள் வாங்கவில்லை. இதன்பின்னர் 4 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் எடுத்தனர்.
4 ஏக்கருக்கான பணத்தை கடந்த 25 நாட்களுக்கு முன்புதான் வாங்கினோம். ஆனால் நாங்கள் கூடுதல் இழப்பீடு கேட்டு வந்த 2½ ஏக்கர் நிலத்துக்கு பணத்தை வாங்கவில்லை.
பரவனாறு வாய்க்கால் பணியை மேற்கொள்ள கடந்த 24-ந்தேதி கலெக்டர் ஆலோனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டம் இரவு 10 மணி வரைக்கும் நடந்தது. அப்போது, 40 நாட்கள் வரைக்கும் கால அவாசம் தருவதாக சொன்னார்கள். அதன்பின்னர் இரவில் வீட்டுக்கு வந்து தூங்கினேன். ஆனால் காலையில் எந்திரங்களை விளை நிலத்தில் இறங்கி, பரவனாறு வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கி விட்டார்கள்.
முழுத்தொகையாக தருவதில்லை
நிலம் கொடுத்தவர்களில் 6 லட்சம் ரூபாய் இழப்பீடு பெரும்பாலானவர்களுக்கு முழு தொகையையும் நிர்வாகம் வழங்கிவிடுவதில்லை. இந்த தொகையை 3 ஆக பிரித்து கொடுப்பார்கள். முதலில் 1½ லட்சம் கொடுப்பார்கள். 2 ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு வருடத்துக்கு பின்னர் கடைசி காசோலை தருவார்கள்.
மொத்தமாக தந்தால், அதை பயனுள்ளதாக விவசாயிகள் மாற்றி இருப்பார்கள். மகள்களுக்கு திருமணம் நடத்துவது, மாடுகள் ஏதேனும் வாங்குவது என்று எதற்காவது பயன்படுத்துவோம். ஆனால் இங்கு நிலைமை அப்படி இல்லை. பணம் வாங்கிய பலர் தங்களது நிலத்தையும் இழந்து விட்டனர், வாங்கிய பணத்தையும் செலவு செய்து விட்டு, இன்று வழிதெரியாமல் தவிக்கிறார்கள். தற்போது ரூ.6 லட்சம் இழப்பீட்டுக்கு வட்டி போட்டு தரவேண்டாம், நிலத்துக்கான இன்றைய விலையையும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பையும் தான் கேட்கிறோம்.
என்.எல்.சி. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றியது இ்ல்லை. அதனால்தான் என்.எல்.சி. மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள் என்றார்.