கருத்து சுதந்திரத்தை பேணி பாதுகாக்க உறுதி ஏற்போம்..!


சுதந்திர தினம்  2024
x
தினத்தந்தி 15 Aug 2024 1:19 PM IST (Updated: 15 Aug 2024 1:42 PM IST)
t-max-icont-min-icon

பொதுவெளியில் முன்வைக்கப்படும் கருத்துகள், சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்.

இந்தியாவின் விடுதலை நாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நாம், நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் விடுதலை பெற்று சுதந்திர காற்றை முதன் முதலில் சுவாசித்த நாள் ஆகஸ்டு 15.

அரும்பாடு பட்டு பெற்ற சுதந்திரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ம் தேதி விமரிசையுடன் கொண்டாடும் நாம், இந்த தினத்தில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் வலி மிகுந்த போராட்டங்களை எண்ணிப் பார்க்கிறோம். நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று பல கொடூரங்களை அரங்கேற்றிய ஆங்கிலேயர்களை வெளியேற்றும் விடுதலைப் போரில் நம் தலைவர்கள் செய்த தியாகத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை.

அரும்பாடு பட்டு பெற்ற சுதந்திரத்திற்குப் பிறகு, நம் சொந்த நாட்டில், நமக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் கிடைத்தன. நாடு படிப்படியாக முன்னேற்றம் அடைந்து, இன்று உலக அரங்கில் சக்திவாய்ந்த நாடாக திகழ்கிறது. ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற நிலையை அடைந்திருக்கிறோம். எனினும் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கான பனிப்போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

எனவே, பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம் என்பது வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இல்லாமல், தலைவர்கள் போராடி பெற்ற உரிமைகளையும், கருத்து சுதந்திரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். பேச்சுரிமை, எழுத்துரிமை அனைவருக்கும் சமம் என்ற நிலை வரவேண்டும். அதேசமயம், பொதுவெளியில் முன்வைக்கப்படும் கருத்துகள், சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்.

தற்போது சமூக வலைத்தளங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால், கருத்துக்களை கவனமாக பதிவு செய்யவேண்டியது அவசியம். உண்மைக்கு மாறான கருத்துக்கள், சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை தவிர்க்கவேண்டும். இத்தகைய பதிவு, பிறரின் மனதை காயப்படுத்தலாம்.. மோதலை ஏற்படுத்தலாம்.. ஏன்..? மிகப்பெரிய அழிவுக்கே அடித்தளமாக அமையலாம் என்பதால் கவனம் தேவை.

இதுவே நமது உரிமைகளையும் கருத்து சுதந்திரத்தையும் பேணி பாதுகாப்பதற்கு, சுதந்திர திருநாளில் நாம் மேற்கொள்ளும் உறுதிமொழியாக இருக்கவேண்டும். ஜெய்ஹிந்த்.


Next Story