வண்ணங்களின் திருவிழா ஹோலி

பிரகலாதனை கொல்லும் முயற்சியில் ஹோலிகா நெருப்பில் எரிந்து மாண்டுபோனதை குறிக்கும் வகையில் ஹோலிகா தகனம் என்ற நிகழ்வு நடைபெறுகிறது.
வட இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பண்டிகையானது பக்த பிரகலாதனின் வரலாற்றோடு இணைந்த பண்டிகையாகும். வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் ஹோலிகா தகனம் என்ற நிகழ்வு நடைபெறுகிறது. இதன் பின்னணியை பார்ப்போம்.
அசுர குலத்தைச் சேர்ந்த இரண்யகசிபுவின் சகோதரனான இரண்யாட்சனை மகா விஷ்ணு ஏற்கனவே வதம் செய்திருந்ததால், அவர் மீது கடும் கோபம் கொண்டிருந்தான் இரண்யகசிபு. ஆனால், அவனது மகன் பிரகலாதன் பிறக்கும்போதே ஹரி பக்தனாக பிறந்தார். அதாவது, தன்னுடைய தாயின் கருவில் இருக்கும்போதே, நாரத முனிவரின் மூலமாக நாராயணரின் நாமத்தைக் கேட்டறிந்தவர். இதன் காரணமாக அவர் பிறந்தது முதலே நாராயணரின் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.
தன் சகோதரனின் இறப்புக்கு காரணமான மகாவிஷ்ணு மீது மகன் பிரகலாதன் பக்தி கொண்டிருப்பது, இரண்யகசிபுவுக்கு கோபத்தை அதிகப்படுத்தியது. அந்தக் கோபம் மகனையே கொல்லும் அளவுக்கு உக்கிரமாக மாறியது. தான் பெற்ற வரங்களால், 'உலகையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்னைவிட உயர்ந்தவர் யார்?' என்ற அகம்பாவம் இரண்யகசிபுவை சிந்திக்க விடாமல் செய்தது. "நானே கடவுள். என்னையே வழிபட வேண்டும்" என்று தன் மகனிடம் வலியுறுத்தினான். ஆனால் பிரகலாதன் கேட்கவில்லை. இதனால் மகன் என்றும் பாராமல், பல வழிகளிலும் பிரகலாதனை சித்ரவதை செய்ய முயன்று தோற்றுப்போனான். அனைத்து துன்பங்களில் இருந்தும், பிரகலாதனை அவரது நாவில் இருந்து எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்த நாராணயரின் நாமம் காப்பாற்றியது.
ஒருகட்டத்தில் பிரகலாதனை உயிரோடு எரித்து சாம்பலாக்க முயற்சி செய்த இரண்யகசிபு தன் தங்கை ஹோலிகாவின் உதவியை நாடினான். அவள் விசேஷமான ஒரு மந்திர சால்வை வைத்திருந்தாள். அந்த சால்வையை போர்த்தியபடி தீயில் இறங்கினால், தீ உடலை தீண்டாது. இதை ஒரு கவசமாக பயன்படுத்தி பிரகலாதனை எரிப்பதே அவனது திட்டம்.
ஹோலிகாவிடம், நெருப்பின் நடுவில் அமர்ந்து பிரகலாதனை அவளது மடியில் அணைத்து வைத்துக் கொள்ளும்படி உத்தரவிட்டான். சகோதரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை அணைத்தபடி தன் மடியில் வைத்துக் கொண்டு மரக் கட்டைகளின் மேல் அமர்ந்தாள். ஹோலிகா மட்டும் தனது விசேஷ சால்வையை போர்த்தியிருந்தார்.
மரக்கட்டைகளுக்கு தீ மூட்டப்பட்டது. அக்னி ஜூவாலைகள் கொழுந்து விட்டு எரிந்தபோதும் நாராயணரின் நாமத்தை உச்சரிப்பதை பிரகலாதன் நிறுத்தவில்லை. அப்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது. ஹோலிகா அணிந்திருந்த மந்திர சால்வை அவளைவிட்டு விலகி பிரகலாதனை சுற்றிப்படர்ந்து போர்த்திக்கொண்டது. பாதுகாப்பு கவசமான சால்வை அகன்றதால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலாகிப்போனாள்.
அடுத்தவர்களுக்கு எந்தவிதத் துன்பமும் செய்ய இந்த மந்திர சால்வையை பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் தான் பிரம்மா ஹோலிகாவுக்கு வரம் அளித்திருந்தார். ஆனால் அவள் பிரகலாதனைக் கொல்வதற்கு சதி செய்ததால் அவளது சக்தி உரிய நேரத்தில் அவளைவிட்டு போனது.
திருமாலின் திருவருளால் பிரகலாதனுக்கு ஒன்றும் நேரவில்லை. அவர் சிரித்தபடியே நெருப்பில் இருந்து வெளியே வந்தார்.
ஹோலிகா நெருப்பில் எரிந்து மாண்டுபோனதால் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதை வெளிப்படுத்தும் வகையிலேயே, 'ஹோலி பண்டிகை' கொண்டாடப்படுவதாக புராணத் தகவல் சொல்கிறது. ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு மரக்கட்டைகளை வைத்து, அதில் ஹோலிகா உருவ பொம்மையை வைத்து எரியூட்டுவார்கள். அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஹோலி கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு நாளை (13.3.2025) ஹோலிகா தகனமும், நாளை மறுநாள் (14.3.2025) ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.