ப்ளாஷ்பேக் 2023; ஆசிய விளையாட்டு போட்டி முதல் செஸ் வரை...! முக்கிய நிகழ்வுகள்


ப்ளாஷ்பேக் 2023; ஆசிய விளையாட்டு போட்டி முதல் செஸ் வரை...! முக்கிய  நிகழ்வுகள்
x

இந்தியா வரலாற்றில் முதன் முறையாக 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டு போட்டி ;

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா வரலாற்றில் முதன் முறையாக 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது. மேலும் பதக்க பட்டியலில் 4-வது இடம்பிடித்து அசத்தியது. இதில் ஈட்டி எறிதல், கபடி, கிரிக்கெட், ஆக்கி உள்பட பல போட்டிகளில் இந்திய அணி தங்கப்பதக்கம் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா தனது முதல் ஆசிய விளையாட்டு தங்கப்பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து;

இந்த ஆண்டு நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் குவைத் அணியை வீழ்த்தி 9-வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

இதில் பரிசளிப்பு விழா மேடையில் நின்ற ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் ஸ்பெயின் வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசாவின் உதட்டில் முத்தமிட்டார். அவரது செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ்¨ருபியாலெஸ் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இன்டர் மியாமி அணியில் இணைந்த மெஸ்சி:

சர்வதேச அளவை பொறுத்த வரை கால்பந்து உலகின் சிறந்த வீரரும் , அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்சி, 2 ஆண்டுகளாக விளையாடி வந்த பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அணியில் இருந்து விலகி அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி கிளப்பில் இணைந்தார். இது கால்பந்து உலகில் பேசும் பொருளானது.

டென்னிஸ்;

*ஆண்கள் டென்னிஸ் பிரிவில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் இந்த வருடமும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற 4 தொடர்களில் 3-ல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் மற்றும் யுஎஸ் ஓபன் ஆகியவற்றை கைப்பற்றி 8-வது முறையாக ஆண்டு இறுதியில் நம்பர் 1 இடத்தை அலங்கரித்தார். மேலும் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

*இந்த ஆண்டிற்கான சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பேமுக்கு முதல்முறையாக இந்திய வீரர்களான லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் தேர்வாகி பெருமை சேர்த்தனர்.

*பெண்கள் பிரிவில் இந்த ஆண்டு சிறந்த வீராங்கனையாக போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் தேர்வு செய்யப்பட்டார். இவர் இந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றிருந்தார்.

ஆக்கி;

*இந்திய ஆண்கள் ஆக்கி அணி இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஓலிம்பிக்கிற்கு நேரிடையாக தகுதி பெற்றது.

*பெண்கள் ஆக்கி அணி இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பட்டம் வென்று அசத்தியது. மேலும் ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பத்தக்கம் வென்றது.

*சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த வீரராக ஹர்திக் சிங் மற்றும் சிறந்த பெண் கோல் கீப்பராக சவிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

இந்திய மல்யுத்த விவகாரம்;

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டி முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார்.

இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்.

இந்நிலையில் புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

செஸ் விளையாட்டில் கலக்கிய தமிழக உடன்பிறப்பு:

இந்த வருடம் செஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் அவருடைய அக்கா வைஷாலியும் பெருமை சேர்த்தனர். செஸ் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா, நம்பர் 1 வீரரான நார்வேயை சேர்ந்த மார்னஸ் கார்சென் உடன் மோதினார். டை பிரேக்கர் வரை போராடி தோல்வி அடைந்தாலும், பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டுகள் குவிந்தன.

* வைஷாலி சுவிஸ் செஸ் தொடரில் பட்டம் வென்று கேன்டிடேட் செஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்ததுடன், கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தும் பெற்றார்.


Next Story