ப்ளாஷ்பேக் 2023: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்.. சட்டமன்ற தேர்தல்கள் ஒரு பார்வை


ப்ளாஷ்பேக் 2023: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்.. சட்டமன்ற தேர்தல்கள் ஒரு பார்வை
x
தினத்தந்தி 25 Dec 2023 4:11 PM IST (Updated: 25 Dec 2023 4:58 PM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டு நடைபெற்ற 9 மாநில சட்டமன்ற தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகின்றன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இந்த ஆண்டு மாநிலங்களவை இடைத்தேர்தல், 9 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள், பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. இதில் 9 மாநில சட்டமன்ற தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகின்றன. அதிக கவனம் பெற்ற 9 மாநில தேர்தல் முடிவுகளை சுருக்கமாக பார்ப்போம்.

திரிபுரா (பிப்ரவரி 16)

திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 55 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎப்டி 6 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஒரு தொகுதியில் மட்டும் பாஜகவுக்கு போட்டியாக, கூட்டணிக் கட்சியான ஐபிஎப்டி-யும் வேட்பாளரை நிறுத்தியது. இதில், பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஐபிஎப்டி-க்கு ஒரு இடம் கிடைத்தது. மாணிக் சாஹா மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். கடந்த தேர்தலை ஒப்பிடும்போது பாஜக கூட்டணிக்கு 11 இடங்கள் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

மேகாலயா (பிப்ரவரி 27)

மேகாலயாவில் நடந்த தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றதுடன், கான்ராட் சங்மா முதல்-மந்திரி பதவியை தக்க வைத்தார். 60 தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி 26 இடங்களை பிடித்தது. பின்னர் பாஜக, யுடிபி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கான்ராட் தலைமையிலான ஆட்சி அமைந்தது.

நாகாலாந்து (பிப்ரவரி 27)

நாகாலாந்தில் நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. பா.ஜ.க. 12 இடங்களிலும், கூட்டணி கட்சியான என்.டி.பி.பி. 25 இடங்களிலும் வெற்றி பெற்றது. நெய்பியு ரியோ மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

கர்நாடகம் (மே 10)

கர்நாடகாவில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியை பெற்று, பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றியது. இது, 1989 தேர்தலுக்குப் பிறகு கர்நாடகாவில் அதிக இடங்கள் மற்றும் வாக்கு சதவீத அடிப்படையில் காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

சித்தராமையா பதவியேற்பு

முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவக்குமார், பரமேஷ்வர் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு முதல்-மந்திரி பதவி சித்தராமையாவுக்கும், துணை முதல்-மந்திரி பதவி டி.கே.சிவகுமாருக்கும் வழங்கப்பட்டது.

மிசோரம் (நவம்பர் 7)

மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணியிடம் இருந்து ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியது. 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன. பா.ஜ.க. 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைத்தது.

புதிய அரசின் பதவியேற்பு விழா டிசம்பர் 8ம் தேதி நடைபெற்றது. ஜோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்துஹோமா அம்மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

சத்தீஷ்கார் முதல் மந்திரியாக பதவியேற்ற விஷ்ணு தியோ சாய்

சத்தீஷ்கார் (நவம்பர் 7, 17)

சத்தீஷ்கார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 54 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டிசம்பர் 13ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது. முதல்-மந்திரியாக விஷ்ணு தியோ சாய் பதவியேற்றார்.

மோகன் யாதவ்

மத்திய பிரதேசம் (நவம்பர் 17)

மிகப்பெரிய மாநிலமான மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 66 இடங்களை கைப்பற்றியது. புதிய அரசின் பதவியேற்பு விழா டிசம்பர் 13ம் தேதி நடைபெற்றது. முதல்-மந்திரியாக மோகன் யாதவ் பதவியேற்றார். ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவ்தா ஆகியோர் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றனர்.

ராஜஸ்தான் (நவம்பர் 25)

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரசிடம் இருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியது. ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இதில் 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. பாஜக 115 இடங்களை பிடித்து தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 69 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பஜன்லால் சர்மா முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

தெலுங்கானா (நவம்பர் 30)

தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து அடுத்தடுத்து இரண்டு முறை முதல்-மந்திரியாக இருந்த சந்திரசேகர ராவ் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார். காங்கிரஸ் கட்சி, ஆட்சியை கைப்பற்றியது.

ரேவந்த் ரெட்டி

மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி 39 தொகுதிகளை பிடித்தது. பாஜக 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட ரேவந்த் ரெட்டி, டிசம்பர் 7ம் தேதி பதவியேற்றார்.


Next Story