படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் கொடி நாள்


படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் கொடி நாள்
x
தினத்தந்தி 7 Dec 2023 2:54 PM IST (Updated: 7 Dec 2023 8:31 PM IST)
t-max-icont-min-icon

போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கான மறுவாழ்வு பணிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் நல்வாழ்வுக்காக கொடி நாளில் மக்கள் ஒன்றிணைகிறார்கள்.

இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி படைவீரர் கொடி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. 1949ஆம் ஆண்டு முதல் கொடிநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாட்டின் ஆயுதப் படைகளே நமது பலம். அவர்கள் எல்லையில் நின்று, நாட்டு மக்கள் நிம்மதியாக இருப்பதை உறுதி செய்வதற்காக தங்கள் இன்னுயிரை பணயம் வைக்கின்றனர். அவர்கள் துணிச்சலுடனும் வீரத்துடனும் எதிரிகளை எதிர்த்துப் போராடுகிறார்கள். சில சமயங்களில் தேசத்தை பாதுகாக்கும் பணியில் உயிர்த்தியாகம் செய்கிறார்கள்.

எனவே, ஆயுதப் படைகளின் நலனுக்காக நிதி சேகரிக்கவும், நாட்டைக் காக்கும்போது இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தவும் கொடி நாளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

கொடி நாள் வரலாறு:

ராணுவ வீரர்கள், கடற்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்களை கவுரவிக்கும் வகையில் டிசம்பர் 7ஆம் தேதி ஆயுதப்படை கொடி தினமாக கொண்டாடப்படும் என்று ராணுவ அமைச்சகம் 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிவித்தது. அத்துடன், பேட்ஜ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை விற்பதன் மூலம் ஆயுதப் படைகளின் முன்னேற்றத்திற்காக நிதி சேகரிக்குமாறும் மக்களை கேட்டுக்கொண்டது. இந்த நாளில், போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கான மறுவாழ்வு பணிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் நல்வாழ்வுக்காக மக்கள் ஒன்றிணைகிறார்கள்.

முக்கியத்துவம்:

ஆயுதப்படைகளின் மேம்பாட்டிற்காக நிதி சேகரிப்பதற்காக நாடு முழுவதும் கொடிகள், ஸ்டிக்கர்கள் மற்றும் பிற பொருட்களை விற்க மக்கள் இந்த நாளில் ஒன்று கூடுகிறார்கள். கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமாகவும் திரட்டப்படும் நிதியை படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.


Next Story