அகமதாபாத்தில் ஜெகநாதர் ரத யாத்திரை தொடங்கியது.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


Jagannath Rath Yatra in Ahmedabad
x
தினத்தந்தி 7 July 2024 1:26 PM IST (Updated: 7 July 2024 3:17 PM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரி அமித் ஷா மங்கல ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பாரம்பரிய வழக்கப்படி தங்க துடைப்பத்தால் ரதம் செல்லும் தெருவை சுத்தம் செய்தார்.

அகமதாபாத்:

ஆண்டுதோறும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஜெகநாதர் ரத யாத்திரை பிரமாண்டமாக நடைபெறும். குறிப்பாக, ஒடிசாவின் பூரி நகரில் உள்ள ஜெகநாதர் கோவிலில் நடைபெறும் ரத யாத்திரை மிக பிரபலம். ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகியோர் எழுந்தருளி பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இந்த ஆண்டுக்கான ரதயாத்திரை இன்று நடக்கிறது.

ஜெகநாதர் ரத யாத்திரையை பார்ப்பதற்கு பூரி செல்ல இயலாதவர்களும், ஜெகநாதரை தரிசிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு இடங்களில் ஜெகநாதர் ஆலயங்களிலும், ஆன்மீக அமைப்புகள் சார்பிலும் ரத ரத யாத்திரைகள் நடத்தப்படுகின்றன.

அவ்வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் இன்று ரத யாத்திரை தொடங்கியது. அகமதாபாத்தின் ஜமால்பூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஜெகநாதர் கோவிலில் இருந்து ஜெகநாதர், அவரது சகோதரர் பால்பத்ரர் மற்றும் அவரது சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி ரதங்களில் (தேர்கள்) எழுந்தருளி யாத்திரையாக புறப்பட்டனர். தேர்களை பழங்கால பாரம்பரியத்தின்படி கலாஷி சமூக உறுப்பினர்கள் இழுத்தனர்.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மங்கல ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பாரம்பரிய வழக்கப்படி தங்க துடைப்பத்தால் ரதம் செல்லும் தெருவை சுத்தம் செய்தார். தேர்கள் செல்லும் ஊர்வல பாதையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். இந்த ஊர்வலம் நகரின் பல்வேறு பகுதிகளைக் கடந்து இரவு 8 மணியளவில் கோவிலுக்கு திரும்பும். ரத யாத்திரையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story