ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி?
காலையிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடாமல் கிருத்திகை விரதம் இருப்பது நல்லது.
முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் மூன்று கார்த்திகைகள் மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அவை உத்திராயன காலத்தின் துவக்க மாதமான தை மாதத்தில் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை, தட்சிணாயன காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை ஆகியவையாகும். இவற்றில் ஆடிக்கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள்.
விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.
கிருத்திகை நாளில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து நீராட வேண்டும். பின்னர் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது முருகப் பெருமானின் ஆலயத்திலோ முருகனை வழிபட்டு பின்னர் விரதத்தை தொடங்கவேண்டும். இந்த நாளில் காலையிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் பால் அல்லது பழங்கள் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். விரத காலத்தில் முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், பக்தி பாடல்கள் பாடி முருகனை ஆராதிக்கலாம். மாலை நேரத்தில் வீட்டில் பூஜைகளை செய்துவிட்டு சைவ உணவு சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை நாளை (ஜூலை 29) வருகிறது. நாளை மதியம் 2.41 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (ஜூலை 30) மதியம் 1.40 மணி வரை கார்த்திகை நட்சத்திரம் உள்ளது.
பொதுவாக கார்த்திகை விரதம் இருப்பவர்கள், பரணியிலேயே விரதத்தை தொடங்கிவிட வேண்டும் என்பது நியதி. பரணியில் தொடங்கி, கார்த்திகை முடியும் வரை விரதம் கடைபிடிப்பார்கள். அந்த வழக்கப்படி பார்த்தால் நாளை காலையிலேயே விரதத்தை தொடங்கி, நாளை மறுநாள் மாலையில் நிறைவு செய்யலாம். அல்லது திருச்செந்தூர் கோவில் நேரத்தை கணக்கில் எடுத்து விரதம் இருப்பவர்கள் நாளை மறுநாள் (ஜூலை 30) காலையில் விரதத்தை தொடங்கி, மாலையில் நிறைவு செய்து கொள்ளலாம்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional