நாளை மறுநாள் வரலட்சுமி விரதம்.. வீட்டில் பூஜை செய்வது எப்படி?


வரலட்சுமி பூஜை செய்வது எப்படி?
x
தினத்தந்தி 14 Aug 2024 7:09 AM GMT (Updated: 14 Aug 2024 7:12 AM GMT)

இந்த ஆண்டு ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் வருவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மகா விஷ்ணுவின் துணைவியான மகாலட்சுமி, வரங்களை அள்ளித் தருவதால் 'வரலட்சுமி' என அழைக்கப்படுகிறார். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்கும் நாள்தான் வரலட்சுமி விரத நாள். மகாலட்சுமி தேவியை வழிபட்டு வேண்டிய வரம் பெறும் சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும். இந்த விரதத்தை திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் கடைபிடிக்கலாம். வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது கடைபிடித்து வரும் வீட்டில் வறுமை, திருமணத் தடை இருக்காது, திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு நாளை மறுதினம் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வரலட்சுமி விரத தினம் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வருவதும், மகாவிஷ்ணுவிற்குரிய வளர்பிறை ஏகாதசி விரத தினத்தில் வருவதும் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பூஜை செய்வது எப்படி?

திருமணமான பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து, வீட்டு வாசலில் மாக்கோலம் இட்டு, விளக்கேற்றி, மகாலட்சுமியை வாசலில் இருந்து அழைத்துச் சென்று பல விதமான மந்திரங்கள் சொல்லி வழிபடுவது வழக்கம்.

மகாலட்சுமி அலங்காரம்

பூஜைக்கான கலசத்தை மகாலட்சுமி போன்று அலங்காரம் செய்யவேண்டும். மனைப்பலகையில் கும்பம் வைத்து, கும்பத்தில் உள்ள தேங்காயில் அம்மன் முகம், கிரீடம் வைக்கவேண்டும். அத்துடன் ஆடை அணிகலன்கள் அணிவித்து, மஞ்சள், குங்குமம் வைத்து, பூச்சூட்டி அலங்கரிக்கவேண்டும். பின்னர், வீட்டின் வாசலில் வைத்து மகாலட்சுமியை அந்த கலசத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொள்ளவேண்டும். வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். பின்னர் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பூஜைக்கான இடத்தில் அமரச் செய்யவேண்டும்.

பிரார்த்தனை

இப்போது மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும். பஞ்சமுக நெய் விளக்கு ஏற்றி வெற்றிலை, பாக்கு, பழம், நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்ற உணவுப் பொருட்கள் படைக்க வேண்டும். இதையடுத்து மங்களகரமான தோத்திரங்களை சொல்லலாம். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம். நோன்புக் கயிறை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி, லட்சுமி அஷ்டோத்ரசதம், கனகராதா ஸ்தோத்திரம் சொல்லலாம். படிக்க தெரியாதவர்கள் வரலட்சுமியை மனதார வேண்டிக்கொண்டால் போதும். `மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் தந்தருள வேண்டும்' என்று மனமுருக பிரார்த்தனை செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

பூஜையில் வைத்திருந்த நோன்புச்சரடை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்துகொள்ள வேண்டும்.

எளிய முறையில்..

வரலட்சுமி அன்று கலசம் அமைத்து அம்மனின் முகம் வைத்து வழிபடுவதற்கு வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள் எளிமையாக தாமிரம் அல்லது செம்பினால் ஆன சொம்பினை பயன்படுத்தி கலசம் அமைக்கலாம். இதற்கு அம்மன் முகம் இல்லை என்றால் வெறும் தேங்காயில் மஞ்சள் பூசி, அதில் குங்கும திலகம் இட்டு வைத்து வழிபடலாம். கலசம் அமைக்கவும் முடியாது என்பவர்கள் அம்மனின் படத்தை வைத்து வழிபடலாம். மகாலட்சுமியின் படமும் இல்லை என்பவர்கள், ஒரு சிறிய அகலில் தீபம் ஏற்றி வைத்து, அதை மகாலட்சுமியாக பாவித்து வழிபடலாம்.

விலை உயர்ந்த பொருட்களை எதுவும் வாங்க முடியாதவர்கள் வெற்றிலை பாக்கு, 2 வாழைப்பழம் வைத்தும் வழிபடலாம். கொஞ்சம் வசதி உள்ளவர்கள் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடலாம். வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், மற்ற வீடுகளில் நடக்கும் பூஜையில் பங்கேற்று அன்னையின் அருள் பெறலாம்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional


Next Story