புயல் இன்று மாலை கரையை கடக்கிறது; 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
புயல் இன்று கரையக் கடப்பதால் பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவறுத்தி உள்ளது.
சென்னை,
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது.
Live Updates
- 30 Nov 2024 4:32 AM IST
சென்னையில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, சென்னையில் நேற்று இரவில் இருந்து தற்போது வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. செண்டிரல், எழும்பூர், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, வண்ணாரப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை, மயிலாப்பூர், அடையார் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதைபோல சென்னை புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
- 30 Nov 2024 3:59 AM IST
தஞ்சையில் 2 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை
புயல் காரணமாக இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள இரண்டு தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.
- 30 Nov 2024 1:56 AM IST
மணிக்கு 7 கி.மீட்டர் வேகத்தில் நகரும் புயல்
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறிய பின்னர் நகரும் வேகம் சற்று குறைந்துள்ளது. 15 கி.மீ வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது. புயல் இன்று கரையைக் கடக்கக்கூடும் என்பதால், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் சூறாவளிக் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இருந்து 230 கி.மீட்டர் தொலைவில் புயல் உள்ளது
- 30 Nov 2024 1:34 AM IST
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு. கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகை, புதுவை, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
- 30 Nov 2024 12:52 AM IST
தமிழக கடற்பகுதியை நெருங்கும் பெஞ்சல்
வங்கக் கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது.
சென்னையில் விட்டுவிட்டு தொடரும் மழை, நாளை முதல் தீவிரமடையும் என தகவல்.
சென்னையிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
- 30 Nov 2024 12:49 AM IST
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கீழ் காணும் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடலூர்,
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- சென்னை
- செங்கலபட்டு
- மயிலாடுதுறை
- ராணிப்பேட்டை
- 30 Nov 2024 12:45 AM IST
வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது
சென்னை,
புயல் எச்சரிக்கையையொட்டி சென்னையில் உள்ள 786 பூங்காக்கள் மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதேபோன்று கடற்கரைக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிகளுக்கோ அல்லது பூங்காவிற்கோ செல்ல வேண்டாம். பூங்காக்களில் உள்ள பழமையான மரங்கள் விழுந்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பு கருதி அனைத்து பூங்காக்களும் மூடப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இன்று (சனிக்கிழமை) ‘‘பெஞ்ஜல்'' புயல் கரையை கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று செயல்படாது. பொதுமக்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்படுகிறது.